"மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தீ விபத்து: தமிழக அரசின் இயலாமையை காட்டுகிறது'
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தமிழக அரசின் இயலாமை மற்றும் குறுகிய செயல்பாட்டுத் தன்மையை


மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தமிழக அரசின் இயலாமை மற்றும் குறுகிய செயல்பாட்டுத் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது என மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் தீ விபத்துக்குள்ளான பகுதியை ஞாயிற்றுக்கிழமை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தீ விபத்தின் மூலம் அங்கிருக்கும் பிரச்னைகள் நாடு முழுதும் அறியும் நிலை ஏற்பட்டுள்ளது. தீ விபத்தானது மின்கசிவால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், தீத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மதுரை மாநகர் முழுதும் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் தீத் தடுப்பு நடவடிக்கை எதுவும் அமைக்கப்படவில்லை. கோயிலுக்குள் சிறிய இடத்தில் அதிகமான கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் அங்காவது தீத் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.
தீ விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு உள்ள படிப்பறிவை வைத்து தனியாக ஆய்வை மேற்கொள்ளவுள்ளேன். ஆய்வறிக்கையை அரசுக்கு கோரிக்கையாக அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
விபத்திலிருந்து பாடம் கற்று, இத்தகைய விபத்து மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மேலை நாடுகளில் தீ விபத்தின்போது தேவையான தண்ணீரைப் பெறும் வகையில் தெருக்களில் குழாய் அமைப்புகள் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் மதுரையிலும் அதுபோன்ற அமைப்பு இருந்துள்ளது. தற்போது அந்த மாதிரி அமைப்பு இல்லை என்பது பெருங்குறையாகும்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு என தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தும் அதை அரசு நிறைவேற்றவில்லை. எனவே தீ விபத்தானது தமிழக அதிமுக அரசின் இயலாமையையும், குறுகிய தன்மை செயல்பாட்டையுமே வெளிப்படுத்துவதாக உள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டம் நடந்தால் அதில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கான தேவைகளை முன்னிலைப்படுத்தி பேசுவேன் என்றார்.
முன்னதாக அவரை கோயிலுக்குள் கடை வைத்திருப்போர் சந்தித்துப் பேசினர். தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளுமாறும் அவர்கள் கோரினர்.
பாமக: ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநில மகளிரணி நிர்வாகி திலகபாமா உள்ளிட்டோரும் கோயிலில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...