கருப்பட்டி ரயில் நிலையம் வழியே மீண்டும் திண்டுக்கல் - மதுரை ரயில் இயக்கப்பட வேண்டும்: பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி

சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி வழியாக திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயிலை மீண்டும் நிறுத்தி இயக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி வழியாக திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயிலை மீண்டும் நிறுத்தி இயக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
   மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது கருப்பட்டி ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை உள்ளடக்கி கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம் உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளும்.  சின்ன இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பொம்மன்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களும் உள்ளன. இதில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுரைக்குச் செல்ல கருப்பட்டி ரயில் நிலையம் வழியே செல்லும் திண்டுக்கல் - மதுரை, மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயிலை பயன்படுத்தி வந்தனர். இவர்களில் பெரும்பாலும் விவசாயிகள், கூலி வேலை செய்பவர்களும், மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் அடங்குவர்.
  திண்டுக்கல் - மதுரை இடையே  இடையே சோழவந்தான், கொடை ரோடு ஆகிய நிறுத்தகங்களுக்கு அடுத்தபடியாக அதிகளவு பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாக கருப்பட்டி ரயில் நிலையம் திகழ்கிறது. இந்நிலையில் போதுமான ஆட்கள் கருப்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஏறுவதில்லை, இதனால் ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கருப்பட்டி ரயில் நிலையத்தில் திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயில் நிற்காது என ரயில்வே நிர்வாகம் 2016 ஜூன் 15 ஆம் தேதி அறிவித்தது.
  ரயில் நின்றுச் செல்லும் நிலையமாக (ஹால்ட் ஸ்டேஷன்) கருப்பட்டி ரயில் நிலையம் இருந்ததால் நாளொன்றுக்கு குறைந்தது 50 பயணச் சீட்டுகளாவது விற்க வேண்டும். ஆனால், கருப்பட்டி ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 31 பயணச் சீட்டுகள் மட்டுமே விற்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் காரணம் கூறப்பட்டது.
  தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தின் இந்த முடிவை எதிர்த்து கருப்பட்டியைச் சேர்ந்த யு. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். 
  இந்நிலையில், சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்தபோது நாளொன்றுக்கு மதுரைக்குச் சென்று வர ரூ. 20 மட்டுமே கட்டணமாக இருந்தது. சீசன் டிக்கெட்டுக்கு ரூ.185-ம், மூன்று மாதங்களுக்குச் சேர்த்து எடுக்கப்படும் சீசன் டிக்கெட்டுக்கு ரூ. 500 மட்டுமே செலவாகியுள்ளது. தற்போது பேருந்து கட்டண உயர்வுக்குப் பின்னர் சாதாரண பேருந்துகளில் மதுரைக்குச் சென்று வர ரூ. 50, சொகுசுப் பேருந்துகளில் சென்று வர ரூ. 66-ம் செலவாகிறது. மேலும், இங்குள்ள விவசாயிகள் தங்கள் காய்கறி மூடைகளை ஏற்றிச் செல்வதற்கான சரக்கு கட்டணமும் பேருந்துகளில் அதிகரித்துள்ளது.
  இதுதொடர்பாக கருப்பட்டியைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர் சி. முருகேஸ்வரன் கூறியதாவது:
இந்த ரயில் நிலையத்தின் மூலம் 2014-2015 வரை ரூ.89 ஆயிரத்து 635 வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. ஆனால், கருப்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் ரயிலை நிறுத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 705 டீசல் செலவு மட்டும் ஆகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 70 வருவாய் இழப்பு ஏற்படுகிறது என ரயில்வே நிர்வாகம் பதிலளித்தது.  
ஆனால், கருப்பட்டி வழியே பயணிக்கும் திண்டுக்கல்-மதுரை பயணிகள் ரயிலை மின்சாரத்தில் இயங்கும் ரயிலாக மாற்றி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிறது, இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
 மேலும்  2014-2015 ஆம் ஆண்டில் மட்டும் 8 ஆயிரத்து 479 பயணச்சீட்டுகள் பெற்றுள்ளோம். 2015-2016 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 598 பயணச்சீட்டுகள் பெற்றுள்ளோம். கருப்பட்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனை மையம் இல்லாத காரணத்தால் நாங்கள் மதுரை ரயில் நிலையத்தில் பயணச் சீட்டுகளைப் பெற வேண்டிய நிலையில் உள்ளோம். இதனால் கருப்பட்டி ஊர்மக்கள் வாங்கும் பயணச் சீட்டுகள் மூலம் ஈட்டப்படும் வருவாய் அனைத்தும் மதுரை ரயில் நிலையத்தின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. எனவே ரயில்வே கணக்குகளில் கருப்பட்டி ரயில் நிலையம் ஒரு செயல்படாத ரயில் நிலையம் போல கணக்கு காட்டப்படுகிறது.
  75 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் நிலையத்தில் 2016-க்கு முன்னர்தான் ரூ. 35 லட்சம் செலவில் புதிய நடைமேடைகள் அமைக்கப்பட்டன. இவை அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. ஆனால், தற்போது இவை பயனற்ற நிலையில் உள்ளது.  ரயில் இங்கு நிற்காததால் கடந்த ஓராண்டும் உரிய நேரத்திற்கு வேலைக்கும், கல்வி நிலையங்களுக்கும் செல்ல முடியாமல் மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து 
தரப்பினரும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். வருவாயை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் மீண்டும் கருப்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி இயக்க வேண்டும் என்றார்.
  இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டதற்கு, வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிலளிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com