நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்குரைஞர் உள்பட 6 பேரிடம் போலீஸ் விசாரணை

வத்திராயிருப்பு பகுதியில் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வழக்குரைஞர் உள்ளிட்ட 6 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

வத்திராயிருப்பு பகுதியில் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வழக்குரைஞர் உள்ளிட்ட 6 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன் சாயல்குடி அருகே மணி என்பவர் கொலை செய்யப்பட்டாராம். இது தொடர்பாக கர்ணனை விசாரிக்க சாயல்குடி போலீஸார் அவனியாபுரம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவனியாபுரம் போலீஸார் கர்ணனை தேடி வந்தனர். 
இந்நிலையில் கர்ணன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த வத்திராயிருப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாகவும், அங்கு துப்பாக்கி வாங்குவதற்காக சென்றிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் வத்திராயிருப்பு சென்று வீரமணி என்பவர் வீட்டில் பதுங்கி இருந்த கர்ணன் மற்றும் அங்கிருந்த வீரமணி, கனகராஜ், சரவணக்குமார், கர்ணனின் தாயார் ஜோதி உள்ளிட்ட 5 பேரை பிடித்தனர். இதில் வீரமணி என்பவர் வழக்குரைஞராக உள்ளாராம். 
மேலும் அவர்கள் இருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது மற்றும் சாயல்குடி கொலை வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீஸார் 6 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com