
வைகை ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மோதியதில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அவரது தாயாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி நித்யா. இவர்களின் மகள் தனலெட்சுமி, சோழவந்தானில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2016 ஜூனில் சைக்கிளில் தனலெட்சுமி பள்ளிக்கு சென்ற போது, அந்த வழியாக வைகை ஆற்றில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மோதி உயிரிழந்தார்.
அதையடுத்து ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி, நித்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நித்யாவுக்கு அரசு வேலையும், அவரது மகள் இறந்ததற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் 2017 ஜூனில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், மனுதாரருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிவாரணம், மாதந்தோறும் ரூ.1,000 விதவை நிதி உதவி, கணவர் இறந்ததும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்து நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகள் சட்டவிரோதமாக மணல் அள்ளிச் சென்ற மாட்டு வண்டி மோதி உயிரிழந்ததும், அவர் இறந்து ஒரு வாரத்தில் கணவர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு கனிமவளச் சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பாக 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 28 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது.
நாட்டில் ஒவ்வாரு குடிமகன்களை பாதுகாப்பதும் அரசின் கடமை. அதிகாரிகளின் கவனக்குறைவால் கடமையில் இருந்து அரசு தவறியுள்ளது. இதனால் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை. இதனால் தனி நீதிபதி உத்தரவில் தலையிட வேண்டிய தேவையில்லை.
மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்ய்படுகிறது. தனி நீதிபதி உத்தரவுப்படி மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







