ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மதுரை ரயில் நிலையத்தில் இடநெருக்கடி: பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

மதுரை ரயில் நிலையத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் இடநெருக்கடியை

News image
Updated On :29 ஏப்ரல் 2019, 4:23 am

மு.கார்த்திக்

மதுரை ரயில் நிலையத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் இடநெருக்கடியை சமாளிக்க பலஅடுக்கு தானியங்கி வாகன நிறுத்துமிடம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை விட மதுரை ரயில் நிலையம் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு ரயில்வே வாரியத்தால் மதுரை கோட்டத்தில் மதுரை ரயில் நிலையத்தை தேர்வு செய்து, முழுமையாக பயணிகளின் வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், ரயில் நிலையத்தில் கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் முக்கியமாக நெரிசலை தவிர்க்க, கிழக்குப்பகுதியில் 2 ஆவது நுழைவு வாயில் திறக்கப்பட்டது. மேலும், நகரப் பேருந்துகள் நிறுத்தம் அகலப்படுத்தப்பட்டது. நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தனித்தனியாக செல்ல பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த பாதைகள் முறையாக பயன்படுத்தப்பட வில்லை. அந்த பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படுகின்றன. மழைக் காலங்களில்  மழைநீரை கடத்துவதற்கு வழியின்றி, நுழைவுவாயில் பகுதி வழியாக ஆறாக ஓடுகிறது. கிழக்கு நுழைவு வாயில் பகுதி மற்றும் கணினி முன்பதிவு மையத்தின் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் "நோ பார்க்கிங்' என்ற பதாகைகள் வைக்கப்பட்டிருந்தாலும், அதனை வாகன ஓட்டிகள் கடைபிடிக்காமல், தங்களின் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். எனவே இதனை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
இடநெருக்கடியை தவிர்க்க கூடுதல் வாகன நிறுத்தம் அமைக்கப்படுமா?
சென்னை போன்ற பெருநகரங்களில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் உள்பட சுமார் ஆயிரம் வாகனங்களை பாதுகாப்பாகவும், இடநெருக்கடி இன்றியும் நிறுத்திக்கொள்ள முடியும். கணினி மூலம் உடனடியாக வாகனத்தை அதன் உரிமையாளர் எடுத்துக் கொள்ளவும் முடியும். அதேபோன்ற கட்டமைப்பு மதுரை ரயில் நிலையத்திலும் அமைக்கப்பட்டால், பெரும் இடநெருக்கடி தவிர்க்கப்படும்.
இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகள் கூறியது: மதுரை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிக்காக ரூ.17 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்துவருகின்றன. மேற்கு நுழைவு வாயில் பகுதியில் 3 அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளது. இதனை பெரும்பாலும் வெளியூர் செல்லும் பயணிகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் அருகில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் தான் நிறுத்திச் செல்கின்றனர். அதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதும் ஒரு காரணமாக உள்ளது. இதைவிட ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஏற்றி விட்டுச்செல்வதற்காக வருவோர் தான் தங்களின் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தி இடநெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். இதை ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் கண்காணித்து ஒழுங்குபடுத்தினால், இந்த பிரச்னையை எளிதாக சரிசெய்து விடலாம் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.