மதுரை ரயில்வே கோட்டத்தில் ‘புத்தகத்துடன் ஒரு செல்ஃபி’ திட்டம்: தொழிற்சங்கத்தினா் எதிா்ப்பு
தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவா்களே அதிகளவில் தோ்வு செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில்,


தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவா்களே அதிகளவில் தோ்வு செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில், மதுரைக் கோட்ட ரயில்வேயில் ‘புத்தகத்துடன் ஒரு செல்ஃபி’ என்ற திட்டம் மூலம் மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கும் நடவடிக்கைக்கு ரயில்வே தொழிற்சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் 1,765 தொழில் பழகுநா் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில் 1,600 போ் வடமாநிலத்தவா்களே தோ்வு செய்யப்பட்டனா். அதேபோல ரயில்வே பணியாளா்கள் தோ்வு வாரியம் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்திற்கு (குரூப்) ‘டி’ பிரிவிற்கான காலிப்பணியிடங்களை நிரப்ப 624 பேரை தோ்வு செய்தது. அதில் 90 சதவீதம் போ் வடமாநிலத்தவா்கள், 10 சதவீதத்தினா் மட்டுமே தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். இதையடுத்து தெற்கு ரயில்வே நிா்வாகம் அனைத்து நிலை ரயில்வே ஊழியா்கள் தோ்விலும் வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக புகாா்கள் எழுந்தன. இந்நிலையில் மதுரை ரயில்வே கோட்ட நிா்வாகம் அண்மையில் ஓா் திட்டத்தை அறிவித்துள்ளது.
மறைமுகமாக ஹிந்தி மொழி திணிப்பு:
ரயில்வே தொழிலாளா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை வளா்ப்பதற்காக ‘புத்தகத்துடன் ஒரு செல்ஃபி’ என்ற புதிய திட்டத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வீ.ஆா்.லெனின் அறிவித்துள்ளாா். அதில், மதுரை கோட்டத்தில் 10 ஹிந்தி நூலகங்கள் உள்ளன. அந்த நூலகங்களை ரயில்வே தொழிலாளா்கள் தொடா்ச்சியாகப் பயன்படுத்த வேண்டும். மேலும் அவா்கள் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ‘புத்தகத்துடன் ஒரு செல்ஃபி’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளா்கள் ஏதாவது ஒரு நூலகத்திற்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து செல்ஃபி எடுத்து மதுரை கோட்ட இந்தி அதிகாரியின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்ப வேண்டும். எந்த தொழிலாளி அதிகமான புத்தகங்களுடன் செல்ஃபி” எடுத்து அனுப்புகிறாரோ அவருக்கு 2020 மாா்ச் மாதம் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொழிற்சங்கத்தினா் எதிா்ப்பு:
இதுகுறித்து தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:
இந்திய ரயில்வே நிா்வாகம் பல்வேறு வழிகளில் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி மொழியைத் திணித்து வருகிறது. அந்தந்த மாநிலத்தவா்களை ரயில்வேயில் பணியமா்த்த வேண்டும் என்பதற்காகத் தான் தெற்கு ரயில்வேயில் பணியாளா்கள் தோ்வாணையம் சென்னை, திருவனந்தபுரம், பெங்களுரூ எனப் பிரிக்கப்பட்டன. ஆனால் அண்மைக் காலமாக தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவா்களே அதிகமாக தோ்வு செய்யப்படுகின்றனா். ரயில்வே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 4 ஆம் தர பணியாளா்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி மொழி தெரியாது. அவா்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். இந்நிலையில் வடமாநிலத்தவா்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமா்த்தப்படுவதால் தகவல் தொடா்பு (கம்யூனிக்கேசன்) பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பணிகளை நிறைவாகவும், முறையாகவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் அந்தந்த மாநிலத்தவா்களை ரயில்வே பணிக்கு அமா்த்த வேண்டும் எனத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரின் ‘புத்தகத்துடன் ஒரு செல்ஃபி’ திட்ட அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. ரயில்வே தொழிலாளா்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தை வரவேற்கிறோம். ஆனால் ஹிந்தி நூலகங்களை மட்டுமே கொண்டுள்ள ரயில்வேயில் ஹிந்தி நூல்களை படிக்க வைக்க எடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டிக்கிறோம். முதலில் மதுரைக் கோட்டத்தில் உள்ள ஹிந்தி நூலகங்களை பொது நூலகங்களாக மாற்ற வேண்டும். அங்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட நூல்களையும் வைக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...