ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மதுரை மத்திய காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகளின்றி வியாபாரிகள் அவதி

மதுரை மத்திய காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகளின்றி வியாபாரிகள் மற்றும்  பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

News image
Updated On :13 மே 2019, 4:36 am

மு.கார்த்திக்

மதுரை மத்திய காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகளின்றி வியாபாரிகள் மற்றும்  பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை மாட்டுத்தாவணிப் பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 1,250 கடைகளுடன் மதுரை மத்திய காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் பழைய சந்தையில் இருந்து புதிய சந்தைக்கு சரக்குகளை இறக்கி வியாபாரம் செய்வதில் வியாபாரிகளுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. மேலும் புதிய சந்தையில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கிக் கொடுப்பதிலும் இழுபறி ஏற்பட்டது. 
இதுபோன்ற இடர்கள் இருந்தாலும், புதிய சந்தையால் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறைந்தது. இந்நிலையில், மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்ட சந்தையில், குடிநீர் வசதிக்காக 10 மேடைகள் அமைத்து அதில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்தத் தண்ணீர் தொட்டிக்கான மேடை மட்டுமே உள்ளது. தொட்டிகளை காணவில்லை. மாநகராட்சியால் அமைக்கப்பட்ட கழிப்பறைகளில் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கழிப்பறைகள் மிகவும் மோசமாக உள்ளன. மற்றொரு கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது. 
இதனால், சந்தையின் ஓரப்பகுதிகள் அசுத்தமாகி வருகின்றன. சந்தைக்குள் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் முழுவதும் பெயர்ந்து, கம்பிகள் ஆபத்தான நிலையில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் சரக்கு வாகனங்களின் டயர்கள் பழுதாவது தொடர் கதையாகிறது. உயர்கோபுர மின்விளக்குகள் எதுவும் முறையாக எரிவது இல்லை. இதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சரக்குகளை இறக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. முறையாக அமைக்கப்படாத மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து கொண்டிருக்கின்றன. பெரும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தரமான உணவுகள் கிடைக்கும் வகையில், உணவக வசதி உள்ளிட்டவைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என மதுரை மத்திய காய்கறி சந்தை வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து எம்ஜிஆர் மத்திய சந்தை அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் என்.சின்னமாயன் கூறியது: மதுரை மத்திய காய்கறி சந்தையில், ரூ.2 லட்சம் வைப்புத்தொகை கட்டி, மாதம் தோறும் ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,300 வரை வாடகை செலுத்தி வருகிறோம். இந்த வாடகை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நில மதிப்பின் அடிப்படையில் உயர்த்தப்பட்டும் வருகிறது. இவ்வாறு சரக்கு வாகனங்களுக்கும், இறக்கு மற்றும் ஏற்றுக்கூலிக்கும் போக நாங்கள் உழைத்த பணம் வாடகையாகவும், குப்பை வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவைகளுக்கும் போய் கொண்டிருக்கிறது. 
மதுரை மத்திய காய்கறி சந்தையின் கட்டமைப்பே முறையாக இல்லை. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சந்தைக்கு இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே உள்ளன. சந்தைக்குள் உள்ள கடைகளுக்கு சரக்குகளை இறக்க லாரிகள் செல்லமுடியாத அளவிற்கு கட்டமைப்பு உள்ளது. அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சரக்குகளை இறக்கி வியாபாரம் செய்வதில் பெரும் சிரமம் உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே, சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இங்கும் அதே நிலை தான் நீடிக்கிறது. பொதுமக்களின் வாகனங்களும், சரக்குகள் ஏற்றி வரும் வாகனங்களும் சந்தைக்குள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. 
இதனால் தான் அதிக நெரிசல் ஏற்படுகிறது. அனைத்து வியாபாரிகள், கமிஷன் மண்டி உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகள் என அனைத்துக் கடைக்காரர்களும் குப்பைக்கும் சேர்த்து வரி கட்டுகிறோம். ஆனால் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் குப்பை முறையாக அள்ளப்படுவது இல்லை. குப்பை தொட்டிகள் அமைத்துக் கொடுக்க கோரியும் நடவடிக்கை இல்லை.
இதனால் சந்தை வளாகத்தில் குவிந்திருக்கும் காய்கறி கழிவுகளை திண்பதற்காக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சந்தைக்குள் சுற்றித்திரிகின்றன. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.