முருகனின் முதல்படை வீட்டில் வெற்றி யாருக்கு? தொகுதி  நிலவரம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக, அமமுக கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியானது நகர் மற்றும் கிராமப் பகுதிகளை உள்ளடக்கியது.  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், விமான நிலையம் ஆகியவை இங்கு உள்ளன. மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 13 வார்டுகளும், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 ஊராட்சிகளும் இத் தொகுதியில் அடங்கும்.
 திருப்பரங்குன்றத்தில், முதல் மற்றும் இரண்டாவது (1957, 1962) சட்டப்பேரவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சின்னக்கருப்பத் தேவர் இருந்துள்ளார்.  அதன்பிறகு 1967 முதல் 2016 வரை (இடைத்தேர்தல் உள்பட) நடைபெற்றுள்ள 13 தேர்தல்களில் 4 முறை திமுகவும்,  7 முறை அதிமுகவும், அதிமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
 கடந்த 1971-இல் வெற்றி பெற்ற காவேரி மணியத்தை (திமுக) தவிர தொகுதியின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.  திமுகவைப் பொருத்தவரை கடந்த 1984, 2006 ஆகிய 2 முறை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளது. அதேபோல் 1991  தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பார்வர்டு பிளாக்கு ஒதுக்கிய போதிலும், அப்போதைய வேட்பாளர் ஆண்டித் தேவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
இத்தொகுதியில் அதிமுக,  திமுக கட்சிகளே பெரும்பாலான தேர்தல்களில் நேரடியாக களம் இறங்கின. 2011 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிட இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தன. அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சியைச் சேர்ந்த ஏ.கே.டி.ராஜா வெற்றி பெற்றார்.   2016 தேர்தலில் அதிமுக வேட்பாளரான எஸ்.எம். சீனிவேல் வெற்றி பெற்றார். அவர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்கும் முன்னரே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து 2016 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார். அவர், கடந்த 2018 இல்  உயிரிழந்ததையடுத்து, தற்போது இத் தொகுதிக்கு 2 ஆவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 
 இந்த தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட  கட்சிகளைச் சேர்ந்த 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் அதிமுக வேட்பாளர் எஸ். முனியாண்டிக்கும், திமுக வேட்பாளர் பா. சரவணனுக்கும்,  அமமுக வேட்பாளர் இ. மகேந்திரனுக்கும் இடையேதான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் பலம், பலவீனம்: அதிமுகவின் எஸ். முனியாண்டி, இதே தொகுதியைச் சேர்ந்தவர். அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். இவர் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராகவும், மாவட்ட ஊராட்சியின் உறுப்பினராகவும்
, மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவராகவும் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக இருந்துள்ளார். 
அதிமுக அரசின் சாதனைகள், புதிதாக வரவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, துணைக்கோள் நகரம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் அதிமுகவின் பலமாக உள்ளது.  அதேசமயம் அதிமுகவின் வாக்கு வங்கியை அமமுக பிரிக்கும். இத்தொகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம் தாமதம் மற்றும் ஒரு சில இடங்களில் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் கூறி வருவது இவரது பலவீனமாகக் கருதப்படுகிறது.
திமுகவின் பலம், பலவீனம்: திமுகவின் பா.சரவணன் மருத்துவர். இவர் கடந்த 2016 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நின்று வெற்றிவாய்ப்பை இழந்தவர். அந்த அனுதாபம் மற்றும் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கும் பட்சத்தில் வெற்றிவாய்ப்பு எளிதாக இருக்கும் என நம்புகிறார்.
 திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தது தமது பலமாக கருதுகிறார். தொகுதியில் தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறார் என்று பொதுமக்களும், அனைவரையும் அரவணைத்து செல்லவில்லை என கூட்டணிக் கட்சியினரின் குற்றச்சாட்டும் இவரது பலவீனமாக கருதப்படுகின்றன.
 அமமுக கட்சி:  அமமுகவின் மாவட்டச் செயலரான இ.மகேந்திரன், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். அமமுக பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனின் செல்வாக்கு, சிறுபான்மையினர் வாக்குகள் தமகுக்கு வெற்றியைச் தரும் என்ற நம்பிக்கையில் வாக்கு சேகரித்து வருகிறார். இவர் வெளியூர்காரர் என்பது என்பது பலவீனமாக உள்ளது.  
மக்கள் நீதி மய்யத்தின் சக்திவேல், கட்சித் தலைவர் கமல்ஹாசனின் செல்வாக்கை நம்பி  களம் இறங்கியுள்ளார். நடுநிலையாளர்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.   
 நாம் தமிழர் வேட்பாளர் ரேவதி, இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு, விவசாயிகள், இளைஞர்களின் வாக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
 கட்சித் தலைவர்கள் பலரும் சுற்றி சுழன்று பிரசாரம் செய்துள்ளனர். வெற்றி இலக்கை நோக்கி அரசியல் கட்சிகள் பிரசார உத்தியை வகுத்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கனியை பறிக்க அதிமுக, திமுக, அமமுக கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்கள் விவரம்
மொத்த வாக்காளர்கள்    3, 04,478 
ஆண்கள்    1,50,533  
பெண்கள்     1,53,918
மூன்றாம் பாலினத்தவர்    27
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com