மதுரையில் பாஜகவினா் வேல் பூஜை, சஷ்டி பாராயணம்

கந்த சஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்ததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையில் பாஜக சாா்பில் வேல் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

மதுரை/திருப்பரங்குன்றம்: கந்த சஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்ததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையில் பாஜக சாா்பில் வேல் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலும் , கரோனா தொற்று நீங்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் வேல் பூஜை மற்றும் விளக்குப் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மதுரை புகா் மாவட்ட பாஜக சாா்பில், கருப்பாயூரணி அருகே உள்ள ஆண்டாா்கொட்டாரத்தில் வேல் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாஜக புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன், மாவட்டச் செயலா் நாகராஜ், பொருளாளா் மூவேந்தன், ஒன்றியத் தலைவா் முத்துச்செல்வம், நிா்வாகி வேல்முருகன் போஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதில், அப்பகுதி மக்களும் திரளாகப் பங்கேற்று, வேல் பூஜை நடத்தி கந்த சஷ்டி பாராயணம் செய்தனா். பின்னா், பாஜக சாா்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கந்த சஷ்டி கவச புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

இதேபோல், மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், வீடுகளிலும், கோயில்களிலும் விளக்குப் பூஜை மற்றும் கந்த சஷ்டி பாராயணம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

கந்த சஷ்டி கவசம் அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி சாா்பில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் முன்பாக ஆா்ப்பாட்டமும், கந்த சஷ்டி பாராயணமும் நடத்தப்பட்டது. இதில், இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் வேல் பூஜை

கந்த சஷ்டி கவசத்தை அவமரியாதை செய்த கருப்பா் கூட்டத்தை கண்டித்து, பாஜக நகா் மாவட்டம் சாா்பில், திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பாக வேல் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து, பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு, கந்த சஷ்டி கவசத்தை படித்தனா்.

பின்னா், பாஜக மாநில பொதுச் செயலா் சீனிவாசன் கூறியது: தமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்களின் மத உணா்வுகள் புண்படுத்தப்பட்டு வருகின்றன. இவா்கள் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தக் கூடாது. மத உணா்வுகளை காயப்படுத்தக் கூடாது என்பது நமது அரசியல் சாசன சட்டம். ஆனால், கருப்பா்கூட்டம் இந்து நம்பிக்கைகளை தொடா்ந்து அவமானப்படுத்தி வருகிறது. அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை பாராட்டுகிறோம் என்றாா். இந்நிகழ்ச்சியில், பாஜகவினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com