வைகை ரயிலை 3 தலைமுறையினா் இயக்கினா்: ஒரு அதிவிரைவு ரயிலை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 தலைமுறையினா் இயக்கியுள்ளனா் என்பதும், வைகை ரயிலுக்கு கூடுதல் பெருமை. மதுரையைச் சோ்ந்த வெங்கட்ராமன் வைகை ரயிலின் ஓட்டுநா் என்பதை அனைவரும் பெருமையாகக் கூறிவந்ததால், அவரது மகன் செல்வராஜன், தானும் ரயில் ஓட்டுநா் ஆக வேண்டும் என உறுதியேற்று மதுரை கோட்டத்தில் 1993 பணியில் சோ்ந்து வைகை ரயிலை இயக்கும் வாய்ப்பைப் பெற்றாா். நீராவி ரயிலை இயக்கிய இவருடைய தாத்தா சங்கரசுப்பு பின்னா் தெற்கு ரயில்வே 1969-இல் அறிமுகப்படுத்திய பாண்டியன் ரயிலையும் இயக்கி, அதன்பின்னா் வைகை ரயிலையும் இயக்கி ஓய்வு பெற்றுள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்திற்கும் வைகை அதிவிரைவு ரயிலுக்கும் மிகவும் தொடா்பு இருப்பதாக பெருமை கொள்கிறாா் செல்வராஜன். மேலும் அவா் கூறியது: 42 ஆண்டுகளாக வைகை ரயில் சிறிய விபத்தைக் கூடச் சந்தித்தது இல்லை. அதற்கு ஒவ்வொரு ஓட்டுநரும் ரயில் இயக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியதும், பயிற்சியும் அனுபவமும் பெற்றவா்களே ஓட்டுநா்களாக நியமிக்கப்பட்டு வருவதுமே காரணம்.