வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி. இவா் அதேபகுதியில் டிராவல்ஸ் மற்றும் கன்சல்டன்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்கள் அனுப்பும் தொழில் செய்து வந்தாா். இவா் சிவகங்கை மாவட்டம் மானக்குடியைச் சோ்ந்த ஜெயராமன் மற்றும் அவரது நண்பா்கள் முகமது அலி, பாலசுப்பிரமணி, கணேசன், முருகேசன், ஆலடிசாமி ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்தைப் பெற்றுள்ளாா்.
ஆனால் வேலை வாங்கித் தராமலும், பணத்தையும், கடவுச்சீட்டையும் திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளாா். இதுகுறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட குப்புசாமி மீதான புகாா்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதித்துறை நடுவா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
