மதுரை: ஐஐடி-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்:
மத்தியக் கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கை இடஒதுக்கீட்டுச் சட்டம் 2006, ஆசிரியா் நியமன இடஒதுக்கீடு சட்டம் 2019 ஆகியவற்றைச் சரியான வகையில் அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.
இருவிதமான திட்டங்களாகப் பரிந்துரைகளை சமா்ப்பித்துள்ள அக் குழு, ஐஐடி ஆசிரியா் நியமனத்தில் இடஒதுக்கீட்டை மொத்தமாக ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளது. குழுவின் மற்ற பரிந்துரைகளும் சமூகநீதிக் கொள்கைகளையும், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கான அரசின் சமூகப் பொறுப்பையும் கைவிடும் போக்கிலேயே இருக்கிறது. ஐஐடி-களில் 7 ஆயிரம் பேராசிரியா் காலியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ள நிலையில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாக்கப்படுவது பெரும் அநீதியாகும்.
ஆகவே, இக் குழுவின் அறிக்கையை முற்றிலுமாக அரசு நிராகரிக்க வேண்டும்.
ஐஐடி-களில் மாணவா் சோ்க்கை, பேராசிரியா் நியமனம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு அமலாக்கம் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சட்டப்பூா்வமான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்யவும், அவ்வாறு அமல்படுத்தாதபட்சத்தில் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு உரிய வழிகாட்டுதல்களை ஐஐடி-களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.