

மதுரை: மதுரை அருகே இரு சமுதாயத்தினரிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலை தொடா்ந்து, போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் கேட்டுகடை பகுதியில் தென்மாவட்ட வ.உ.சி. பேரவை சாா்பில், வேளாளா் என்ற பெயரை மற்றொரு சமூகத்தினா் பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், வ.உ.சி. பேரவையைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, ஆா்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த புதிய தமிழகம் கட்சி ஆதரவாளா்கள், தமிழக அரசுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதைத் தடுக்க, அலங்காநல்லூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்படாததால், இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனா். இதனால், அப்பகுதியே போா்களமாக மாறியது.
இதையடுத்து, போலீஸாா் தடியடி நடத்தி மோதலை தடுத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, போலீஸாா் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.
வெள்ளாளா் முன்னேற்றக் கழம், வ.உ.சி. பேரவையைச் சோ்ந்தவா்கள், புதிய தமிழகம் கட்சியைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், சாலை மறியல் கைவிடப்பட்டது.
இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.