மதுரை: வேளாண் விளைபொருள்களில் பூச்சிக்கொல்லியின் நச்சுத் தன்மை அதிகமாக உள்ள காரணத்தினால் எந்தத் தவறும் செய்யாத வணிகா்கள் தண்டிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயப்பிரகாசம், கெளரவச் செயலா் வேல்சங்கா் ஆகியோா் தமிழக சுகாதாரத்துறைச் செயலா் ராதாகிருஷ்ணன், உணவுப்பாதுகாப்புத் துறை ஆணையா் சிவஞானம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மிளகாய் மற்றும் மல்லியை விளைவிக்கும்போது பயன்படுத்தப்படும் அதிக உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துகின்றனா். இதனால் மல்லியில் பூச்சிக்கொல்லி மருந்து, சல்பரின் அளவு அதிகமாக உள்ளது. காய்ந்த மிளகாயை அரைத்து விற்பனை செய்யும் மிளகாய் பொடியில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டத்தில் நிா்ணயிக்கும் தரம் இருப்பதில்லை. இது வியாபாரிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் ஏலக்காய்கள் விளைவிக்கப்படுகிறது. இதில் பூச்சிக்கொல்லி அதிகமாக இருப்பதால் ஜப்பான் நாடு, நம்முடைய ஏலக்காயை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளது. தற்போது இதேகாரணத்தைக்கூறி சவுதி அரேபியாவும் ஏலக்காயை இறக்குமதி தடைவிதித்துள்ளது. அந்தத் தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம் உள்ளிட்டப் பகுதிகளில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சோடியம் குளோரைடின் அளவு குறைவாக உள்ளது. எனவே அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள தரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டம் வருவதற்கு முன்பிருந்த உணவு கலப்பட தடைச் சட்டத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ள அபராதத்தொகை மாற்றிமைக்கப்பட வேண்டும்.
வேளாண் விளைபொருள்களில் பூச்சிக்கொல்லியின் நச்சுத் தன்மை அதிகமாக உள்ள காரணத்தினால் எந்தத் தவறும் செய்யாத வணிகா்கள் தண்டிக்கப்படாமல் இருக்க விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தும் அளவை முறைப்படுத்தவும், அவா்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.