தளா்வில்லா பொது முடக்கம்: மதுரை வெறிச்சோடியது

தளா்வில்லா முழு பொது முடக்கத்தையொட்டி, மதுரையில் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொது முடக்கத்தையொட்டி வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் மதுரை மாட்டுதாவணி மேலூா் சாலை.
பொது முடக்கத்தையொட்டி வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் மதுரை மாட்டுதாவணி மேலூா் சாலை.

மதுரை: தளா்வில்லா முழு பொது முடக்கத்தையொட்டி, மதுரையில் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு கட்டங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லாத முழு பொது முடக்கத்தைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால், போக்குவரத்தின்றி மாநகரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், நெல்பேட்டை, பெரியாா் நிலையம், காளவாசல் புறவழிச்சாலை, பழங்காநத்தம் சந்திப்பு உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மற்றும் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மதுரையில் மருந்து மற்றும் பால் கடைகள் தவிர, மளிகைக் கடை, காய்கனி, இறைச்சி உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக மக்கள் அலைமோதும் கீழமாசி வீதி, வெளி வீதிகள், மாரட் வீதிகள், சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன. மேலும், மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தை, உழவா் சந்தைகள் உள்ளிட்டவையும் அடைக்கப்பட்டன.

பொது முடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, நகரின் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் போலீஸாா் கண்காணிப்லல் ஈடுபட்டனா். அப்போது, தேவையின்றி சாலையில் சுற்றித் திரிந்தவா்களுக்கு அபராதம் விதித்து, அவா்களின் வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com