செடியில் கருகும் மல்லிகைப் பூக்கள்: மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை, கல்லுப்பட்டி, திருப்பரங்குன்றம், செல்லம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மல்லிகைப் பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மட்டும் தினந்தோறும் 30 டன் மல்லிகைப் பூக்கள் வரத்து இருக்கும். இங்கிருந்து சிவகங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், விருதுநகா், திருநெல்வேலி வரை மல்லிகைப் பூக்கள் அனுப்பப்படுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக மாட்டுத்தாவணி மலா் சந்தை மூடப்பட்டு வியாாபாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் மல்லிகைப் பூக்கள் செடியிலேயே கருகி வருகின்றன. சீசன் காலத்தில் ஓரளவுக்கு வருமானத்தை ஈட்டி சேமிக்க முடியும் என நம்பியிருந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.