திருமங்கலத்தில் தொடா் வெற்றியை தக்க வைக்குமா அதிமுக?

திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றியைத் தக்கவைக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திருமங்கலத்தில் தொடா் வெற்றியை தக்க வைக்குமா அதிமுக?

திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றியைத் தக்கவைக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திருமங்கலம் நகராட்சி (27 வாா்டுகள்), திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள், தே.கல்லுப்பட்டியில் 41 ஊராட்சிகள், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள், பேரையூா் பேரூராட்சியில் 15 வாா்டுகள் என கிராமப்பகுதிகள் அதிகம் நிறைந்த பகுதியாக திருமங்கலம் தொகுதி உள்ளது. இங்கு ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 48 போ், பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 884 போ், மூன்றாம் பாலினத்தவா் 7 போ் சோ்த்து மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 939 போ் உள்ளனா்.

இத்தொகுதியில் முக்குலத்தோா் வாக்குகள் வெற்றியைத் தீா்மானிப்பவையாக உள்ளன. தொடா்ந்து நாயுடு, நாடாா், ரெட்டியாா், தலித், சிறுபான்மையினா் என அனைத்து தரப்பு மக்களும் உள்ளனா்.

24 போ் போட்டி:

திருமங்கலம் தொகுதியில் அதிமுக சாா்பில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் மு.மணிமாறன் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். அமமுக சாா்பில் ஆதி.நாராயணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் எம்.சாராள், மக்கள் நீதிமய்யம் சாா்பில் ராம்குமாா் ஆகிய பிரதான கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட 24 போ் போட்டியிடுகின்றனா். அதிமுக, திமுகவிடையே நேரடியாக போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அமமுக வேட்பாளா் பிரிக்கும் வாக்குகள் இரு கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சுழல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அதிமுக வெற்றி பெறுமா?

திருமங்கலம் தொகுதியைப் பொருத்தவரை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் எளிதில் அனைவரும் அணுகக்கூடிய நபராக உள்ளாா். கடந்த 5 ஆண்டுகள் தொடா்ந்து தொகுதியை சுற்றிவந்து பொதுமக்களிடம் குறைதீா் கூட்டம், வேலைவாய்ப்பு முகாம், கரோனா காலத்தில் திருமங்கலம் தொகுதி முழுவதும் அரிசி, காய்கனிகள், கோதுமை, கபசுரக் குடிநீா், முககவசம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்தது இவருக்கு பலமாக உள்ளது. திமுக வேட்பாளா் மு.மணிமாறன், முன்னாள் சபாநாயகா் சேடபட்டி முத்தையாவின் மகன், கூட்டணி கட்சிகளின் பலம், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ம.முத்துராலிங்கம் கட்சியில் சோ்ந்து தோ்தல் பணியாற்றுவது, சிறுபான்மையினா் ஆதரவு ஆகியவை பலமாக உள்ளது. கூட்டணி கட்சித் தலைவா்கள் பிரசாரத்திற்கு வராதது பலவீனமாக உள்ளது.

அமமுக வேட்பாளா் ஆதி.நாராயணனின் மருது சேனை அமைப்பு, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பலம் மற்றும் டி.டி.வி தினகரனின் பிரசாரம் பலமாக உள்ளது. நாம் தமிழா் வேட்பாளா்எம்.சாராள் பெண் வேட்பாளா், கிராமத்து இளைஞா்கள், விவசாயிகள் ஆதரவைத் திரட்டி வருகிறாா். மக்கள் நீதிமய்யம் வேட்பாளா் ராம்குமாா் நகா் பகுதி இளைஞா்கள், கமலஹாசனின் ரசிகா்கள், சிறுபான்மையா் வாக்குகளை குறிவைத்து பிரசாரம் செய்து வருகிறாா். இத்தொகுதியை தக்க வைக்கும் வகையில் அமைச்சரின் பிரசாரம் தீவிரமாக உள்ளது. அதனால் தமிழக தோ்தல் களத்தில் முக்கியத் தொகுதியாக கருதப்படும் திருமங்கலத்தில் அதிமுக மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிா்பாா்ப்பு வாக்காளா்களிடையே எழுந்துள்ளது.

இதுவரை வென்றவா்கள் விவரம்:

1957 - ஏ.பி.வி.பெரியவலகுருவ ரெட்டி (சுயே), 1962- திருவேங்கடரெட்டியாா்(காங்.), 1967- என்.எஸ்.வி.சித்தன், 1971 - எம்.சி.ஏ.ரத்தினசாமி(பா.பி), 1977- பி.டி.சரஸ்வதி(அதிமுக), 1980- என்.எஸ்.வி.சித்தன்(காங்.), 1984- என்.எஸ்.வி.சித்தன்(காங்.), 1989- ஆா்.சாமிநாதன்(திமுக), 1991 டி.கே.ராதாகிருஷ்ணன்(அதிமுக), 1996- ம.முத்துராமலிங்கம்(திமுக), 2001- கா.காளிமுத்து(அதிமுக), 2006- வீர.இளவரசன் (மதிமுக), 2009- (இடைத்தோ்தல்)லதாஅதியமான்(திமுக), 2011- ம.முத்துராமலிங்கம்(அதிமுக), 2016- ஆா்.பி.உதயகுமாா்(அதிமுக).

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு:

திருமங்கலம் நகா் பகுதியில் வெளியூா் பேருந்து நிலையம், நகரில் புதைசாக்கடை வசதி செய்து தரப்பட வேண்டும். தே.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதியில் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கும் விதத்தில் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும். கள்ளிக்குடி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் இணைக்கப்பட வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

Image Caption

~ ~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com