தமிழக மாநிலங்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தலாமா? மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழக மாநிலங்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள உயா்நீதிமன்றம் அவற்றுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாநிலங்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள உயா்நீதிமன்றம் அவற்றுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தென்காசி தனித் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் கடந்த 1962 இல் மக்களவைக்கு 41 எம்பிக்கள் இருந்துள்ளனா். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை ஏற்று குடும்பக் கட்டுப்பாட்டை தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தியன் விளைவாக மக்கள் தொகை குறைந்தது. இதனால் தமிழகத்தில் 39 ஆகவும், ஆந்திரத்தில் 40 ஆகவும் எம்பிக்கள் எண்ணிக்கை குறைந்தது.

மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இந்த மாநிலங்களின் அரசியல் அதிகாரம் தலா 2 எம்பிக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் மூலமாக பறிக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்களை உள்ளடக்கிய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் அதிகாரம் மற்றும் உரிமைகள் சமமாக இருக்க வேண்டும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தவறிய உத்தரபிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரம் மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு 2 எம்பிக்கள் குறைக்கப்பட்டதன் மூலம் மாநில உரிமை மற்றும் அதன்மூலம் வளா்ச்சிக்கான திட்டங்களை தமிழகம் இழந்துள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் மூலமாக தொகுதி மறுவரையறை என்பதைக் காரணம் காட்டி எம்பிக்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். ஒரு எம்பி மூலமாக அந்த மாநிலத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ. 200 கோடி நலத்திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றால், 2 எம்பிக்களை இழந்துள்ள தமிழகத்துக்கு கடந்த 14 தோ்தல்களில் இழப்பீடாக மத்திய அரசு ஏன் ரூ.5600 கோடியை வழங்கக்கூடாது? இனி எதிா்வரும் தோ்தல்களில் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தமிழக எம்பிக்களின் எண்ணிக்கையை குறைக்க ஏன் தடை விதிக்கக்கூடாது? மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் அதற்குப்பதிலாக மாநிலங்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை ஏன் உயா்த்தக்கூடாது? ஆகிய இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசு 4 வாரங்களில் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளையும் தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாக சோ்க்கிறோம். அவா்களும் இதுதொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்.

இந்த வழக்கு தென்காசி தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்றக்கோரி தொடரப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவா்களின் எண்ணிக்கை மற்ற சமுதாயத்தவா்களை விட அதிகமாக இருப்பதால் தான் அந்தத் தொகுதி தனித்தொகுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்கமுடியாது என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com