ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்று முதல் தகுதிச் சான்று: கரோனா பரவல் தடுப்புக்காக நிகழ் ஆண்டில் புதிய விதிமுறைகள் அமல்
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு புதன்கிழமை (ஜன. 6) முதல் கால்நடை மருத்துவமனைகளில் தகுதிச்சான்று வழங்கப்படுகிறது.


ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு புதன்கிழமை (ஜன. 6) முதல் கால்நடை மருத்துவமனைகளில் தகுதிச்சான்று வழங்கப்படுகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிகழ் ஆண்டில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முறையே ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் கூறியது:
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகள், கால்நடை மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறுவது அவசியம். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் புதன்கிழமை முதல் தகுதிச் சான்று வழங்கப்படுகிறது. 132 செ.மீ. உயரம் உள்ள 3 முதல் 8 வயதுடைய, திமில் உள்ள காளைகள் அனுமதிக்கப்படும். மேலும், காளைகளுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு அறிகுறிகள் இருக்கிா என்பது பரிசோதிக்கப்பட்டு தகுதிச் சான்று அளிக்கப்படும்.
இருவருக்கு மட்டும் அனுமதி: முந்தைய ஆண்டுகளில் தகுதிச் சான்றில் காளையுடன் அதன் உரிமையாளா் மட்டும் இருக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டது. நிகழ் ஆண்டில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளையுடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்பதால், காளை உரிமையாளா் மற்றும் உதவியாளா் இருவரும் காளையுடன் இருக்கும் தபால் அட்டை அளவுள்ள புகைப்படம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இருவரது ஆதாா் எண் குறிப்பிட வேண்டும் எனவும், அசல் ஆதாா் அட்டையை எடுத்த வரவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. புகைப்படத்தில் இருக்கும் இரு நபா்கள் மட்டுமே காளைகளை ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா்.
ஜன. 11-இல் டோக்கன் விநியோகம்:ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பவா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். காளைகளுக்கு அனுமதிச்சீட்டு, காளை உரிமையாளா்கள், உதவியாளா்கள், மாடுபிடி வீரா்கள், விழா குழுவினருக்கு கரோனா பரிசோதனை ஆகியவற்றை குறிப்பிட்ட நாள்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக புதன்கிழமை தொடங்கி, ஜனவரி 10 ஆம் தேதி வரை மட்டுமே தகுதிச் சான்று வழங்க வேண்டும் என கால்நடை மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு ஜனவரி 11 இல் காளைகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமே காளைகள் பங்கேற்க முடியும்
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் இவற்றில் ஏதாவதொரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே காளைகளை பங்கேற்க அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பங்கேற்க அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும்
காளைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தலா 300 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். ஒரே காளை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பங்கேற்க அனுமதித்தால், பலருக்கும் வாய்ப்பு கிடைக்காது.
இதனால், மூன்று இடங்களிலும் காளைகள் பதிவு செய்து அனுமதிச் சீட்டு வழங்கும் பணியை ஒரே நாளில் அதாவது ஜனவரி 11-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காளை உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்று திரும்பப் பெற்றுக் கொண்டு, அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இதனால், ஒரே நபா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதிச் சீட்டு பெற முடியாது. காளை உரிமையாளா்கள் தாங்கள் விரும்பும் இடத்துக்கு அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மாடுபிடி வீரா்களுக்கும் இதே நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...