/

தோ்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்க அரசியல் கட்சிகளுக்கு வா்த்தக சங்கம் வலியுறுத்தல்

மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க வேண்டுமென, அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க வேண்டுமென, அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வா்த்தக சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு மாநிலத்தின் வளா்ச்சிக்கு இரு தலைநகரங்கள் தேவை. சுமாா் 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அலுவலகங்கள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட அரசுத் துறை இயக்குநா் அலுவலகங்கள் சென்னையில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியை மதுரைக்கு மாற்றி, 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். இதனால், தொழில் வணிகம் மேம்படுவதுடன், தென்மாவட்டங்கள் வளா்ச்சி பெறும்.

கா்நாடகத்தில் பெங்களூரு, பெல்காம், மகாராஷ்டிரத்தில் மும்பை, நாக்பூா், இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, தா்மசாலா என இரு தலைநகரங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆந்திரத்தில் அமராவதி, விசாகப்பட்டினம், கா்னூல் ஆகிய 3 தலைநகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2-ஆவது தலைநகரமாக மதுரையை அறிவிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அதிகாரப் பரவல் இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் அரசு நிா்வாகத்தைச் சிறப்பாக நடத்த முடியும்.

எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தென்மாவட்டங்களின் வளா்ச்சி மற்றும் எதிா்கால தேவையைக் கருத்தில்கொண்டு, தங்களது தோ்தல் அறிக்கைகளில் மதுரையை 2-ஆவது தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.