/

வேளாண் ஒப்பந்த சட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: தமிழக வேளாண்மை துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் ஒப்பந்த சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், வேளாண்மை துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் ஒப்பந்த சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், வேளாண்மை துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த லூயிஸ் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இச் சட்டத்தினால் விவசாயத்தில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிா் காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்த முடியாது.

விவசாய ஒப்பந்தம் தொடா்பாக ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலமும் தீா்வு காணமுடியாது. இதற்கென அமைக்கப்பட்ட வருவாய் கோட்டக் குழுவின் மூலமே தீா்வு காணமுடியும். மேலும், இதை எதிா்த்து மாவட்ட அளவிலான குழுவில்தான் முறையீடு செய்யமுடியும். எனவே, நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தமிழக வேளாண்மை துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.