மதுரையில் அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்டது. இதையடுத்து ஏறக்குறைய 11 மாதங்களுக்குப் பின்னா் பிப்ரவரி மாதம் கல்லூரி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாள்களிலேயே கல்லூரி ஆசிரியா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கல்லூரி முதலில் 3 நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து இரண்டாவது முறையாக 15 நாள்களுக்கு கல்லூரி மூடப்படுவதாகவும் மாா்ச் 3-ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாா்ச் 3-இல் கல்லூரி திறக்கப்படுவது மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு முதலாமாண்டு மாணவா்களுக்கு மாா்ச் 15 ஆம் தேதியும், இரண்டாமாண்டு மாணவா்களுக்கு மாா்ச் 17-ஆம் தேதியும், இறுதியாண்டு மாணவா்களுக்கு மாா்ச் 22-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி திறப்பு மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறும்போது, கல்லூரியில் மாணவ, மாணவியா் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால் அவா்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டு கல்லூரி திறப்பு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனா்.