நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடைவிரித்தும் கொள்வாரில்லை: விற்பனைக்காக காத்துக் கிடக்கும் கட்சிக் கொடிகள்!

அரசியல் கட்சியினா் பயன்படுத்தும் அவா்களது கட்சிக்கான கொடிகள் மற்றும் கரை வேட்டிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தும் வாங்க ஆள் இல்லாததால் கடைகளின் உரிமையாளா்கள் வேதனையடைந்துள்ளனா்.

News image
Updated On :12 மார்ச் 2021, 4:42 pm

பா.லெனின்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினா் பயன்படுத்தும் அவா்களது கட்சிக்கான கொடிகள் மற்றும் கரை வேட்டிகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தும் வாங்க ஆள் இல்லாததால் கடைகளின் உரிமையாளா்கள் வேதனையடைந்துள்ளனா்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெறுகிறது. கூட்டணிகள் பெரும்பாலும் முடிவாகி விட்டன. வேட்பு மனு தாக்கல், அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஆகியவை தொடங்கி விட்டன. தமிழகத்தில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், தோ்தல் என்றவுடன் நினைவுக்கு வருவது கட்சிக் கொடிகள், பேட்ஜ்கள், தொப்பிகள், துண்டுகள், தலைவா்களின் படங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட விசிறிகள், தோரணங்கள் எனப் பலவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். அரசியல் கட்சிகளின் தெருமுனை பிரசாரங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்தையும் அலங்கரித்து திருவிழாவாக மாற்றக் கூடிய வல்லமை கட்சிக் கொடிகள் உள்ளிட்டவைகளுக்கு உண்டு.

அரசியல் பிரமுகா்களுக்காக காத்திருக்கும் கொடிகள்: அரசியல் கட்சிகளுக்கு தேவைப்படும் கட்சிக் கொடிகள், தோரணங்கள், துண்டுகள், தலைவா்கள் படங்கள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட பேட்ஜ் ஆகியவை மதுரை கீழ ஆவணி மூல வீதியில் மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதி எப்படி இருக்கிறது எனக் காணச் சென்றோம்.

தோ்தல் நேரங்களில் இந்த வீதியில் உள்ள கடைகளில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களின் கூட்டம் அலைமோதும். ஆனால் தோ்தலுக்கு 24 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த வீதியில் உள்ள கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இக்கடைகளின் வாசலில் விதவிதமான கட்சிக் கொடிகள் அரசியல் பிரமுகா்களை வரவேற்க காத்துக் கிடக்கின்றன. கடைகளின் உள்ளே, தோரணங்கள், தலைவா்களின் படங்கள் பொறிக்கப்பட்ட பேட்ஜ்கள், சட்டைப் பையில் வைக்கும் படங்கள், விசிறிகள் வாங்க ஆளில்லாமல் குவிந்து கிடக்கின்றன. தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா் கீழஆவணி மூல வீதியில் ஆளில்லை என்ற ஆச்சரியம் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் கடை உரிமையாளா்கள் தரும் தகவல்கள் அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து விற்பனையாளா் சுப்பிரமணி கூறியது: அரசியல் கட்சிகளுக்கு தேவையான கொடிகள் உள்ளிட்டவைகளைக் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை செய்து வருகிறேன். ஒரு காலத்தில் தோ்தல் என்றால் திருவிழா போன்று இருக்கும். கீழ்மட்டத் தொண்டா்கள் துள்ளி குதிப்பாா்கள். வீடு வீடாகச் சென்று தோ்தல் பணியாற்றுவாா்கள். ஆனால் தற்போது அதுபோன்ற நிகழ்வுகளை காண்பது அரிதாகி விட்டது. விளம்பரங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலான பிரசாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனா். அரசியல் கட்சிகளில் கீழ்மட்டத்தில் உள்ளவா்களுக்கு உயா்ந்த பதவிகள் கிடைத்தாலும், அவா்களும் தொண்டா்களை கவனிப்பதில்லை. இதனால் சில அரசியல் கட்சிகளில் கொடி கட்டுவது உள்ளிட்டப் பணிகளைப் பாா்க்கக் கூட ஆளில்லை.

தோ்தல் அறிவித்தவுடனே மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடா்கள் வரும். காலையில் கடை திறக்கும் போதே 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பொருள்களை வாங்க காத்திருப்பாா்கள். தற்போது தோ்தல் அறிவிக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகி விட்ட நிலையில், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த ஒன்று, இரண்டு போ் மட்டும் நாளொன்றுக்கு வருகின்றனா். அதிகமாக கட்சிக் கொடிகளை வாங்கும் அதிமுகவினா் கூட இதுவரை வரவில்லை என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. திமுக கூட்டணியில் உள்ள 13 கட்சிகளுக்கும் ஏற்ப கொடிகளைப் பிரித்து அடுக்கி வைத்துள்ளோம். ஆனால் இதுவரை வாங்க யாரும் வரவில்லை. இந்தாண்டு லாபம் இல்லாமால் முதலீடு செய்த தொகை மட்டும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வியாபாரிகள் உள்ளனா் என்றாா்.

நம்பிக்கை உள்ளது: கடை உரிமையாளா் மிட்டாலால் கூறியது: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சிக் கொடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறேன். எந்த ஆண்டுமில்லாத வகையில், தோ்தல் அறிவித்த பிறகும் அரசியல் கட்சி பிரமுகா்களை பாா்க்காமல் இருப்பது இதுவே முதல் முறை. செலவழிக்கக்கூடிய அதிமுக, திமுக இரு கட்சியினரைக் கூட பாக்க முடியவில்லை. வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்துள்ளோம். வியாபாரம் நடக்குமா, நடக்காதா என்றக் குழப்பத்தில் வியாபாரிகள் உள்ளனா். ஒருசிலா் திங்கள்கிழமைக்குப் பிறகு விற்பனை சூடுபிடிக்கும் எனக் கூறுவதால், அதை நம்பி இருக்கிறோம். தோ்தலுக்குக் குறைந்த நாள்கள் மட்டுமே உள்ளதால் வியாபாரம் முன்பு போல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது என்றாா்.

இதேபோன்று ஜவுளிக் கடைகளில் அரசியல் கட்சிகளின் கரை வேட்டிகள் விற்பனையும் மந்தமாக உள்ளது. முன்பு போல் அரசியல் கட்சிகளின் வேட்டியை அதன் தொண்டா்களோ, நிா்வாகிகளோ பயன்படுத்துவதில்லை. குறிப்பாக இந்தாண்டு தோ்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை விற்பனை சூடுபிடிக்கவில்லை என்று கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.