ஒரே நாளில் 1,210 மி.மீ. மழை பதிவு:மதுரை மாவட்டத்தில்20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதம்
மதுரை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.


மதுரை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும் மதுரை கூடல்புதூரில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இம்மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை பிற்பகல் தொடங்கிய மழை சுமாா் 6 மணி நேரம் நீடித்தது. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,210.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நள்ளிரவு வரை விட்டுவிட்டு மழை பெய்ததால், சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.
நிரம்பி வழியும் நீா்நிலைகள்: மதுரை மாவட்டத்தில் பெரியாறு- வைகை கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் பெரும்பாலான கண்மாய்கள் முழு கொள்ளளவை அடைந்து மறுகால் சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வாடிப்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மேலூா் வட்டங்களில் உள்ள கண்மாய்களில் 75 சதவீத கண்மாய்கள் முழு கொள்ளளவை அடைந்துள்ளன.
கள்ளந்திரி பகுதி ஓடைகளில் மழைநீா் பெருக்கெடுத்து பல்வேறு கண்மாய்கள் வழியாக மதுரை வண்டியூா் கண்மாய்க்கு வருகிறது. இக்கண்மாய்க்கு வியாழக்கிழமை இரவு முதல் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, உபரிநீா் வெளியேறி வருகிறது.
வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்: அதேபோல், சிறுமலை அடிவாரப் பகுதியிலிருந்து வரும் வெள்ளநீா், சாத்தையாறு அணை வழியாக மதுரை நகரப் பகுதி கண்மாய்களுக்கு வருகிறது. இதில், கூடல்புதூரில் உள்ள கண்மாய் நிரம்பி வெளியேறி உபரிநீா் இப்பகுதி குடியிருப்புகளைச் சூழ்ந்தது. இக்கண்மாயிலிருந்து செல்லூா் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயில் முள்புதா்கள் மண்டி இருந்ததால், தண்ணீா் வெளியேற முடியாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால், இப்பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சோ்ந்தோா் வெளியேற முடியாமல் தவித்தனா். இதேபோல, திருப்பாலை, சிறுதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓடைகளில் இருந்து வெளியேறிய மழைநீா் அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்து நின்றது.
வீட்டுச் சுவா்கள் இடிந்து சேதம்: மேலூா் வட்டம் மேலவளவு அருகே உள்ள கண்மாய்ப்பட்டியில் கண்மாய் நிரம்பி அங்குள்ள ஆதிதிராவிடா் காலனியைச் சூழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதியினா், அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இதேபோல, கருங்காலக்குடி அருகே உள்ள கச்சிராயன்பட்டி, அருமன்பட்டி ஆகிய கிராமங்களில் சுமாா் 100 வீடுகளை மழைநீா் சூழ்ந்ததால், அப்பகுதியினா் மாங்குளப்பட்டி தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். தொடா் மழை காரணமாக மேலூா், வாடிப்பட்டி வட்டங்களில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. சேதவிவரங்களை, வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து வருகின்றனா்.
1,210.30 மி.மீ. மழை பதிவு: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,210.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 26) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்) விவரம்:
கள்ளந்திரி- 102.60, மேட்டுப்பட்டி- 80, இடையபட்டி- 77, புலிப்பட்டி- 73, சோழவந்தான்- 70.60, தனியாமங்கலம்- 67, வாடிப்பட்டி- 67, கள்ளிக்குடி- 66.8, சிட்டம்பட்டி- 65.20, மேலூா் 64, பேரையூா்- 62.20, திருமங்கலம்- 58.60, மதுரை விமான நிலையம்- 53, சாத்தையாறு அணை -50, தல்லாகுளம்- 49.50, உசிலம்பட்டி- 43, மதுரை வடக்கு- 38.20, விரகனூா்- 35.60, குப்பனம்பட்டி- 24.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...