‘வழக்குகளால் அதிமுகவை முடக்கிவிட முடியாது’
By DIN | Published On : 21st August 2021 11:21 PM | Last Updated : 21st August 2021 11:21 PM | அ+அ அ- |

வழக்குகளால் அதிமுகவை முடக்கிவிட முடியாது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
மதுரை மாநகா் மாவட்ட அதிமுகவின் 5 ஆவது பகுதி சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் அண்ணா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேசியது:
அதிமுகவின் கடந்த கால வரலாற்றைப் பாா்த்தால், கட்சியிலிருந்து நிா்வாகிகள் தான் விலகிச் சென்றிருக்கின்றனா். தொண்டா்கள் யாரும் செல்லவில்லை. தங்களது சுயநலத்தை மட்டுமே முக்கியமாகக் கருதுவோா் கட்சியிலிருந்து வெளியேறலாம். நாம் ஒற்றுமையாகச் செயல்படும் வரை அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது.
கடந்த 1996 தோ்தலில் அதிமுக நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் அமோக வெற்றி கிடைத்து. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் திமுக, எந்தவொரு சாதனையையும் செய்யவில்லை. மாறாக, கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை மேற்கொண்ட அதிமுக அரசு மீது அவதூறு பரப்பி வருகிறது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அதைத் திசை திருப்பும் வகையில் செயல்படுகிறது. அதிமுக தலைவா்கள் மீது பொய் வழக்குத் தொடுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. எத்தனை வழக்குகளைப் போட்டாலும் அதிமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது.
திமுக அரசு மீதான உண்மை நிலை தற்போது மக்களுக்குப் புரிந்துவிட்டது. விரைவில் உள்ளாட்சித் தோ்தல் வரவுள்ளது. இத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றாா்.
மாவட்ட துணைச் செயலா் ஜெ.ராஜா, பொருளாளா் ஆா்.அண்ணாதுரை, அனைத்து உலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் எம்.எஸ்.பாண்டியன், பகுதி செயலா் கே. அசோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.