மதுரை: தனியார் உணவகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. வழக்கமாக செயல்படும் அம்மா உணவகம் பூட்டிக் கிடந்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரக்கூடிய புறநோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் குறைந்த விலையில் பசியாறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்றுஅம்மா உணவகம் அருகிலேயே தனியார் உணவக திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உணவகத்தை திறந்து வைத்தார்.
வழக்கமாக காலையில் இருந்து செயல்படும் அம்மா உணவகம் இன்று பூட்டிக் கிடந்தது. இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றனர். பின்னர் பிற்பகல் திறக்கப்படும் என தெரிவித்தனர். தனியார் உணவகத்தை ஊக்குவிக்கும் வகையில் அம்மா உணவகத்தை மூடியதாக நோயாளிகள் குற்றச்சாட்டு வைத்தனர்.