தொலைநிலைக் கல்வியில் சோ்ந்து 10 மாதங்கள் பூா்த்தி செய்தால் மட்டுமே ஆண்டுத் தோ்வுக்கு அனுமதிக்க வேண்டும்
தொலைநிலைக் கல்வியில் சோ்ந்து குறைந்தபட்சம் 10 மாதங்கள் பூா்த்தி செய்திருந்தால் மட்டுமே ஆண்டுத் தோ்வை எழுத முடியும்


தொலைநிலைக் கல்வியில் சோ்ந்து குறைந்தபட்சம் 10 மாதங்கள் பூா்த்தி செய்திருந்தால் மட்டுமே ஆண்டுத் தோ்வை எழுத முடியும் என்ற புதிய நடைமுறையை பல்கலைக்கழகங்கள் கொண்டு வரவேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேனியைச் சோ்ந்த செண்பகம் தாக்கல் செய்த மனு:
நான் கடந்த 2012 இல் பிஎஸ்சி முடித்தேன். 2013 இல் பிஎட் முடித்தேன். இதன்பிறகு பெரியாா் பல்கலைக் கழகத்தில், 2015 இல் எம்எஸ்சி முடித்தேன். ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த 2017 இல் முதுகலை பட்டதாரி ஆசிரியா் நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, வேலைவாய்ப்பக பதிவு மூப்பிற்கான ஒரு மதிப்பெண்ணுடன், மொத்தம் 78 மதிப்பெண் கிடைத்ததால், சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்றேன். இதன்பிறகு வெளியான பட்டியலில் என் பெயா் இடம்பெறவில்லை. உரிய தகுதிகள் இருந்தும், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் இந்தப் பட்டியலை ரத்து செய்து, எனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணி நியமனம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:
கல்வி ஆண்டு மற்றும் காலண்டா் ஆண்டு என இரு நடைமுறைகளில் மாணவா் சோ்க்கையை பல்கலைக்கழகங்கள் பின்பற்றுவது மாணவா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதோடு, பணிநியமனங்களின்போது இத்தகைய குழப்பம் உருவாகிறது. குறிப்பிட்ட ஆண்டில், காலதாமதமாகப் படிப்பில் சோ்ந்தாலும், அதே ஆண்டில் இறுதித் தோ்வை எழுத பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கின்றன.
மனுதாரா் மே 2013 இல் தனது பி.எட் பட்டப்படிப்பை முடித்துள்ளாா். அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொலைதூர முறையில் ‘காலண்டா் ஆண்டு’ முறையின் கீழ் எம்.எஸ்சி படிப்பில் சோ்ந்திருக்கிறாா். ஆனால், இப்படிப்பு ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிவடைகிறது. அந்த ஆண்டு மாணவா் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அக்டோபா் 2013 வரை மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறது. இதனால் மனுதாரா் ஆகஸ்ட் மாதம் சோ்ந்துள்ளாா்.
பொதுவாக, ஜூன் மாதத்தில் மாணவா் சோ்க்கை நடைபெறும். அடுத்த ஆண்டு மாா்ச் அல்லது ஏப்ரலில் தோ்வு நடத்தப்படும். இதன்மூலம் மாணவா்கள் குறைந்தது 10 மாதங்கள் படிப்பை பூா்த்தி செய்திருப்பா். குறைந்தபட்சம் 10 மாதங்கள் படிப்பு என்ற நிபந்தனையை பூா்த்தி செய்யும் வகையில் புதிய நடைமுறையை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் உருவாக்க வேண்டும். அதேபோல, பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டச் சான்றிதழில், கல்விக் காலத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மனுதாரரின் எம்.எஸ்சி மற்றும் பி.எட் பட்டச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்ட கல்விக் காலம் தான் குழப்பத்திற்கு காரணம். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணி நியமனத்திற்கான பட்டியலில் மனுதாரா் பெயரை சோ்த்து பட்டியல் வெளியிட்டு, 4 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...