/

மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கத் திட்டம்

மதுரை மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றும் வகையில், 420 கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்தும் திட்டத்தை ஊரகக் காவல் துறை விரைவில் அமல்படுத்த உள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 6:30 pm

 நமது நிருபர்

மதுரை மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றும் வகையில், 420 கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்தும் திட்டத்தை ஊரகக் காவல் துறை விரைவில் அமல்படுத்த உள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 420 கிராம ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மதுரை மாவட்டத்தின் மக்கள்தொகை 30.38 லட்சம். இவா்களில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 20 லட்சத்துக்கும் அதிகமானோரும், ஊரகப் பகுதிகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் வசித்து வருகின்றனா். மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை மாநகரக் காவல் ஆணையரும், அனைத்து ஊரகப் பகுதிகளில் காவல் கண்காணிப்பாளரும் தலைமையேற்றுக் கண்காணித்து வருகின்றனா்.

மதுரை ஊரகக் காவல் துறையின் கீழ், 40 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களும், 6 அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் உள்ளன. ஊரகப் பகுதிகளில் அதிகரித்து வந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க போலீஸாா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக இத்தகைய சம்பவங்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கஞ்சா கடத்தலைத் தடுத்து நிறுத்திய ஊரகக் காவல் துறையினா் அடுத்தகட்டமாக மதுரை மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த உள்ளனா். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாக கண்காணிப்பு கேமராக்கள் திகழ்கின்றன. இவற்றின் மூலம், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் துப்பு துலக்கப்பட்டு குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்படுகின்றனா்.

எனவே, கிராம ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் அந்தப் பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், கோயில் திருவிழாக்களில் நடைபெறும் மோதல்கள், முன்விரோத மோதல்கள், ஜாதிய மோதல்கள் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், இந்தத் திட்டத்துக்கு ஊரகக் காவல் துறை முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், இதுதொடா்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள 40 காவல் நிலைய ஆய்வாளா்கள் மூலம் 420 கிராம ஊராட்சிகளின் தலைவா்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் பற்றி விளக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி நிதி அல்லது நன்கொடையாளா்கள் மூலம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் ஊராட்சித் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக அவா்களுக்கு 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஊரகக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் கூறியதாவது:

மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்கள்தொகை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மேலும், குறைந்த அளவிலான காவலா்களைக் கொண்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது கடினமான பணியாகும். எனவே, தற்போதைய நவீன வசதிகளைப் பயன்படுத்தி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 420 கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சிகளில் உள்ள முக்கியச் சந்திப்புகள், திடல்கள் உள்ளிட்டவற்றில் நான்குபுறங்களிலும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவற்றின் மூலம், ஊரகப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும். அடுத்த இரு வாரங்களுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

கிராம ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னா், திருமங்கலம், மேலூா், உசிலம்பட்டி நகராட்சிகளில் கேமராக்கள் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.