பழிவாங்கும் நோக்கில் பதியப்பட்ட கஞ்சா வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் பழிவாங்கும் நோக்கத்தில் ஒருவா் மீது போலீஸாா் கஞ்சா வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை, அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் தாக்கல் செய்த மனு:

என் மீது லாட்டரி விற்பனை செய்ததாக போலீஸாா் 17 வழக்குகளைப் பதிவு செய்தனா். இந்த நிலையில், கடந்த 2023, மாா்ச் 7-ஆம் தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான போலீஸாா், எனது அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்த ரூ. 4 லட்சத்தை எடுத்துக் கொண்டு, என்னை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று துன்புறுத்தினா்.

இதுதொடா்பாக போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறை உயா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தேன். நீதிமன்றத்திலும் இதுதொடா்பாக வழக்குத் தொடுத்தேன்.

இந்தப் புகாா் மனுவை திரும்பப் பெறக் கோரி, எஸ்.எஸ்.காலனி போலீஸாா் என்னை துன்புறுத்தினா். இருப்பினும், புகாரை திரும்பப் பெற மறுத்ததால், 21 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாக என் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, அப்போதைய தென் மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ராகா்க் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அஸ்ராகா்க் அளித்த அறிக்கையில், இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் பூமிநாதன், உதவி ஆய்வாளா் பேரரசி உள்ளிட்ட போலீஸாா் தவறு செய்தது உறுதிபடுத்தப்பட்டதாகவும், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை அண்மையில் மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:

உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. இதைக் கருத்தில் கொள்ளாமல் போலீஸாா் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனா். போலீஸாா் மீதான குற்றச்சாட்டை விசாரணை நீதிமன்றமும் ஏற்கெனவே உறுதி செய்தது.

போலீஸாா் மீது அளிக்கப்பட்ட புகாரைத் திரும்ப பெறாததால், பழிவாங்கும் நோக்கத்தில் மனுதாரா் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் நோ்மையான முறையில் நடந்து கொள்ளாமல், தனது அதிகாரத்தின் மூலம் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா்.

எனவே, கஞ்சா வைத்திருந்ததாக மனுதாரா் மீது போலீஸாா் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com