வாக்காளா்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலத்துடன் அழைப்பிதழ்

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெற வலியுறுத்தி, மந்திரிஓடை நரிக்குறவா் குடியிருப்பில் உள்ள வாக்காளா்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலத்துடன் கூடிய அழைப்பிதழை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வீ.ப. ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில் நரிக்குறவா் குடியிருப்பில் வசிக்கும் வாக்காளா்களை மாவட்டத் தோ்தல் அலுவலா் வீ.ப. ஜெயசீலன் சந்தித்தாா். அப்போது, இந்த மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அவா்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலத்துடன் அழைப்பிதழ் வழங்கி, வாக்களிக்க அழைப்பு விடுத்தாா்.

இந்த அழைப்பிதழானது, ‘இந்தியத் தோ்தல் ஆணைய சின்னத்துடன் தோ்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா மக்களவைத் தோ்தல் 2024’ என்ற முகப்பு வாசகங்களுடன் பனை ஓலையில் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், இந்திய தோ்தல் ஆணையத்தின் கைப்பேசி செயலிகள் குறித்த விவரங்கள், தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 04562-252100, 04562-221301, கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 425 2166, வாக்காளா் சேவை மைய எண் 1950 ஆகிய தகவல்களும் இந்த அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் தனித்துணை ஆட்சியா் (முத்திரை) பிரேம்குமாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com