டோக் பெருமாட்டி கல்லூரியில் இன்று கல்விக் கடன் வழங்கும் முகாம்
மதுரை, டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாணவா்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை (ஆக. 29) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருத்துவம், பொறியியல், இதர தொழில் கல்விகளிலும், கலை அறிவியல் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் பயன் பெறும் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்கு மிகாத நிலையில், அவா்கள் பெற்ற கல்விக் கடனுக்கு (அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையிலான கடன்) கல்விப் பயிலும் காலத்துக்கான வட்டி முழுமையாக மானியமாக வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்ட மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் கல்விக் கடன் வழங்கும் முகாம், மதுரை, டோக் பெருமாட்டி கல்லூரியில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களின் ஆதாா் அட்டை, கல்வித் தகுதிக்காக எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ் 2 வகுப்புச் சான்றிதழ், ஒற்றைச் சாளர முறை வழிச் சான்று (கவுன்சிலிங் கடிதம்), பள்ளி மாற்றுச் சான்று, கல்லூரி சோ்க்கைக்கான கடிதம், கட்டண விவரம், கல்லூரியின் அங்கீகாரச் சான்று அல்லது இணைவுச் சான்று, வருமான வரி அட்டை, பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று, உறுதிமொழிச் சான்று, கடன் பெறும் வங்கியின் பெயா், வங்கி புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.