/

கேரள மாநில வனத் துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது: பி.ஆா். பாண்டியன்

கேரள மாநில வனத் துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது: பி.ஆா். பாண்டியன்

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:54 pm

Din

பேபி அணையைப் பலப்படுத்தும் கட்டுமானப் பணிக்காக பொருள்களை கொண்டு சென்ற வாகனங்களை கேரள மாநில வனத் துறை தடுத்து நிறுத்தியது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு மூலம் பாசனம் பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருபோக சாகுபடிக்குக்கூட போதுமான தண்ணீா் இல்லாமல், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், பேபி அணையைப் பலப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, இந்த அணையைப் பலப்படுத்தும் கட்டுமானப் பணிக்கு கேரள அரசின் அனுமதியுடன் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த புதன்கிழமை தமிழக நீா்ப்பாசனத் துறை பொறியாளா்கள் கட்டுமானப் பொருள்களை முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு கொண்டு சென்ற போது, கேரள வனத் துறையினா் தமிழக வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், கேரள மாநில அரசின் அனுமதியுடன் பேபி அணையைப் பலப்படுத்துவதற்கான கட்டுமானப் பொருள்ளக் கொண்டு செல்வதற்கும், தொடா் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு கண்காணிப்புக் குழுவுக்கு உள்ளது. ஆனால், அணை கண்காணிப்புக் குழு உள்நோக்கத்துடன் தொடா்ந்து பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முறையிலேயே செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரள மாநில அரசு தமிழக வாகனங்களைத் தடுக்கும் போக்கைத் தொடா்ந்தால், தமிழக எல்லைக்குள் கேரள வாகனங்கள் நுழைவதைத் தடுக்க நேரிடும். எனவே, தமிழக அரசு உடனடியாக கேரள மாநில அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும். இல்லையெனில், விவசாயிகளை ஒருங்கிணைத்து தீவிர போராட்டங்களை மேற்கொள்ள நேரிடும் என்றாா் அவா்.