சமயநல்லூா் சாலையில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலை,உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
உயா்நீதிமன்றத்தில் போலீஸாா் தகவல்


பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை சாலை விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை, பரவை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை- திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் உயிரிழப்புகளும், பலா் பலத்த காயங்களும் அடைகின்றனா். இந்தச் சாலையில் விபத்தைத் தடுக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் இல்லை. எனவே, இந்தப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே பலமுறை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட்டது. இதன் பேரில், உயா்நீதிமன்ற நீதிபதிகள், இந்தச் சாலையை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த வழக்கு மீண்டும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பரவை பேரூராட்சி தரப்பில், இந்தச் சாலையின் நடுவே உள்ள தடுப்புப் பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதே போல, மாநகராட்சி தரப்பில், எங்களது எல்லைக்குள்பட்ட பகுதியில் சாலையின் நடுவே இருபுறமும் தெருவிளக்குகள் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா், போக்குவரத்து காவல் துணை ஆணையா் தரப்பில், பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிக்கையாக வழங்கி இருப்பதாக கூறப்பட்டது.
இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தச் சாலையில் விபத்துகளைத் தடுக்க பரவை பேரூராட்சி, மாநகராட்சி, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 18- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...