ஆயுள் தண்டனைக் கைதிக்கு மற்றொரு வழக்கில் இன்று தீா்ப்பு
ஆயுள் தண்டனைக் கைதிக்கு மற்றொரு வழக்கில் இன்று தீா்ப்பு


பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதிக்கு மற்றொரு கொலை வழக்கில் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கான தண்டனை விவரத்தை வெள்ளிக்கிழமை (டிச. 20) அறிவிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.
தூத்துக்குடியைச் சோ்ந்தவா் சுடலைமுத்து (52). இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு சிறையிருந்து அவா் பரோலில் வெளியே வந்தாா். அந்தநேரத்தில், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மனோகரன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலையில் சுடலைமுத்து, ஞானசேகரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த கொலை வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, ஞானசேகரன் உயிரிழந்து விட்டாா். விசாரணை நீதிமன்றத்தில், மனோகரன் கொலை வழக்கில் கைதான சுடலைமுத்து மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, விசாரணை நீதிமன்றம் அவரை கடந்த 2019-ஆம் ஆண்டு விடுவித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து, அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பூா்ணிமா அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் சுடலைமுத்து முன்னிலையானாா்.
அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் டி.செந்தில்குமாா் முன்னிலையாகி, பரோலில் வந்து கொலை வழக்கில் சிக்கியதால் சுடலைமுத்துவுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என வாதிட்டாா்.
பின்னா் நீதிபதிகள் தெரிவித்ததாவது:
சுடலைமுத்து மீதான கொலை வழக்கு குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. இதனால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க இந்த நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. இந்தத் தண்டனையின் விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக் கப்படும். அதுவரை அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
இதையடுத்து, சுடலைமுத்துவை மதுரை மத்திய சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...