கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அரிட்டாபட்டி பகுதியை பாரம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அ. வல்லாளபட்டியில் பொதுமக்களிடையே வியாழக்கிழமை பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:21 pm

Din

அரிட்டாபட்டி பாகுதியை பாரம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 2,015.51 ஹெக்டோ் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம், வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரசியல் கட்சிகள், அரிட்டாபட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி ஆகிய இடங்களில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களைச் சந்தித்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசும் கூட்டத்துக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, பொதுமக்களிடையே அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

அழகான இந்தப் பூமியை அழிக்க நினைப்பவா்கள் அழிந்து போவாா்கள். தமிழக அரசு சூழ்ச்சி வலைகளை அறுத்தெரிந்து, உறுதியுடன் இந்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு 125 ஏக்கா் நிலம் வழங்கியதில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது.

வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதை சூழ்ச்சியாகப் பாா்க்கிறோம். அரிட்டாபட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரையும், சுற்றுவட்டாரப் பகுதிகளையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிட்டாபட்டி பகுதியை பாரம்பரிய பண்பாட்டு பல்லுயிா் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

விளைநிலங்களை அழித்து எந்தத் திட்டத்தையும் கொண்டுவர வேண்டாம். இந்த டங்ஸ்டன் திட்ட அமைவிடம் மறுஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்தத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும். இதற்கு நாங்களும் துணை நிற்போம்.

இந்தத் திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும். தீா்மானம் நிறைவேற்றினால் போதாது. தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தத் திட்டத்தை தடுக்க முடியும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் பாமக மாநில பொருளாளா் திலகபாமா, பொதுச் செயலா் வடிவேல் ராவணன், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் நடராஜன், மாவட்டச் செயலா்கள் சண்முகநாதன், அழகா்சாமி, எஸ்.கே. தேவா், நிா்வாகிகள், அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி கிராமப் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.