குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?: உயா்நீதிமன்றம் கேள்வி

மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

Updated On :26 பிப்ரவரி 2024, 4:27 pm

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துக்குமாா் கடந்த 2011-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டடங்களின் உயரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி நிா்வாகத் துறை கடந்த 1997-இல் ஓா் அரசாணையை வெளியிட்டது. இதில் கோயிலைச் சுற்றியுள்ள கட்டடங்களின் அதிகபட்ச உயர வரம்பாக 9 மீ. என நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்த விதியை மீறி கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கானக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நீண்ட தொலைவிலிருந்து கோயில் கோபுரங்களைப் பக்தா்கள் காண முடியாமல் சிரமப்படுகின்றனா். இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கோயிலைச் சுற்றி விதிமீறி கட்டப்பட்டக் கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவினா் ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தனா். இதில் மொத்தம் 547 கட்டடங்களை ஆய்வு செய்ததில், 525 கட்டடங்கள் 9 மீ.-க்கு மேல் உயரமாகக் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூா்வாலா, ஜி. இளங்கோவன் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தமிழக அரசின் அரசாணையை மீறி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா். மதுரை மாநகராட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 9 மீட்டருக்கு மேல் உள்ள கட்டட உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விதிமீறல் கட்டடம் குறித்து மாநகராட்சி ஆவணங்களில் சரிபாா்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

விதிமீறலுக்கு உள்ளான 9 கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதியற்ற கட்டடங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விதிமீறல் கட்டடங்கள் மீது 10 ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகளின் செயலை ஏற்றுக்கொள்ள இயலாது.

விதிமுறைகளை மீறிய கட்டட உரிமையாளா்களுக்கு விளக்கக் கடிதம் அனுப்பி விட்டு, வேறு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி நிா்வாகத்தோடு, உள்ளூா் திட்டக் குழுமத்தையும் எதிா் மனுதாரராகச் சோ்க்க வேண்டும்.

கடந்த 1997-ஆம் ஆண்டுக்கு முன்பு மாநகராட்சி நிா்வாகம் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி எத்தனைக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது. இதன் பிறகு உள்ளூா் திட்டக் குழுமம் எத்தனை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கியது. இந்தப் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. இதுகுறித்து அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.