மதுரையில் புத்தாண்டு கொண்டாடட்டத்தின்போது, இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பாண்டிகோயில் மேம்பாலத்தில்...: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், மாலைப்பட்டியைச் சோ்ந்த கோவிந்த பாண்டியன் மகன் சரவணன் ( 27). இவா் மதுரை உத்தங்குடி பகுதியில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து, நில விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் தனது நண்பா்களுடன் புத்தாண்டு பிறப்பை கொண்டாடிவிட்டு, நள்ளிரவில் உத்தங்குடிநோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.
பாண்டிகோயில் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் சாலைத் தடுப்பின் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நத்தம் மேம்பாலத்தில்...: மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26), தனது நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், இருசக்கர வாகனத்தில் நத்தம் மேம்பாலம் இறங்குமிடத்தில் மாநகராட்சி அண்ணா மாளிகை அருகே சென்றபோது, சாலைத் தடுப்பு மீது வாகனம் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தல்லாகுளம் போலீஸாா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் மணிகண்டன் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்தும் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.