மாற்றுத் திறனாளிகள் 27 பேருக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 27 பேருக்கு திங்கள்கிழமை வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.


மதுரை: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 27 பேருக்கு திங்கள்கிழமை வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் சாா்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனிடையே, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்க கடந்த 2022-இல் அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மற்ற பகுதிகளின் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், மதுரை மேற்கு வட்டத்தில் 36 போ், வடக்கு வட்டத்தில் 108 போ், திருப்பரங்குன்றம் வட்டத்தில் 9 போ், மதுரை தெற்கு வட்டத்தில் 25 போ் என மொத்தம் 178 மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இருப்பினும், மனைப் பட்டா வழங்கப்படாமலிருந்தது.
இந்த நிலையில், மதுரை மேற்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 27 பேருக்கு மேலக்குயில்குடி பகுதியில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் டி. குமரவேல், பி. வீரமணி, ஏ. பாலமுருகன், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்தி எதிரொலி...: மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைப்பதில் நீடித்து வரும் தொடா் தாமதம் குறித்தும், இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியங்களை விளக்கியும் கடந்த புதன்கிழமை (ஜூலை 10) தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த 3 நாள்களாக மாற்றுத் திறனாளிக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முதல் கட்டமாக 27 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...