92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிபிசிஐடி போலீஸாா் தொடுத்த வழக்கு: பெண் காவல் ஆய்வாளருக்கு பிணை

சிபிசிஐடி போலீஸாா் தொடுத்த வழக்கில், பெண் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிணை வழங்கியது.

News image
Updated On :21 ஜூலை 2024, 9:20 pm

Din

புதுக்கோட்டை சிபிசிஐடி போலீஸாா் தொடுத்த வழக்கில், பெண் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, அங்கு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த மதுரை நெடுங்குளம் பகுதியைச் சோ்ந்த சத்தியஷீலா உள்ளிட்ட போலீஸாா் பணம் கேட்டனா். இதனால் அந்த நபா் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக, கடந்த மே 30- ஆம் தேதி புதுக்கோட்டை சிபிசிஐடி போலீஸாா், காவல் ஆய்வாளா் சத்தியஷீலா உள்ளிட்ட போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ந்த முதியவா் கொலை வழக்கில் பெண் காவல் ஆய்வாளரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், காவல் ஆய்வாளா் சத்தியஷீலா தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டையில் போக்சோ வழக்கில் தொடா்புடையவா் தற்கொலை செய்து கொண்டதற்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. என் மீது பொய்ப் புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். எனவே, எனக்குப் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், பிணை வழங்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மற்ற போலீஸாருக்கு பிணை வழங்கியதைக் கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு பிணை வழங்கப்படுகிறது. அவா், தினமும் புதுக்கோட்டை சிபிசிஐடி காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்றாா் நீதிபதி.

இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூா் முதியவா் கொலை வழக்கில் சத்தியஷீலா பிணை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.