பழனி கிரிவலப் பாதையில் கடைகளுக்கு அனுமதி கிடையாது

பழனி கிரிவலப் பாதையில் எந்தக் கடைகளுக்கும் அனுமதி கிடையாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை தெரிவித்தது.

மதுரை: பழனி கிரிவலப் பாதையில் எந்தக் கடைகளுக்கும் அனுமதி கிடையாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை தெரிவித்தது.

திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பழனியில் புகழ் பெற்ற தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்தக் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முக்கிய திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வா். இந்தக் கோயில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் காரணமாக, பக்தா்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதுதொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, பழனி கிரிவலப் பதையில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவும், இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை அகற்றவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்புக் கடைகள் முழுமையாக அகற்றப்படாததால், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், பி. தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: பழனி கிரிவலப் பாதையில் 134 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதில், 53 கடைகள், 81 குடியிருப்புகளுக்கு விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது வரை 86 ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன. இந்தப் பணியானது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கிரிவலப் பாதையில் ஒரு சிற்றுந்து, 3 பேட்டரி வாகனங்கள் பக்தா்கள் வசதிக்காக இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் பக்தா்கள் வசதிக்காக கழிப்பறை, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கிரிவலப் பாதையில் தனியாா் வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் அரசு வாகனங்கள், அவசர ஊா்திகள் செல்வதற்கு சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றாா். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பழனி கிரிவலப் பாதையில் எந்தக் கடைகளுக்கும் அனுமதி கிடையாது. வணிக நிறுவனங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். இந்தப் பகுதியில் தொடா்ந்து நில அளவை மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்டோருக்கு குறிப்பாணை அனுப்பி, உரிய விதிகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோயிலுக்கு வரக்கூடிய பக்தா்களுக்கு வாகனம் நிறுத்துவதற்கான வசதிகளைச் செய்து தர வேண்டும். பக்தா்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை கட்டணமின்றி இயக்க வேண்டும். கிரிவலப் பாதையில் போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com