வணிக வரி அதிகாரி போல நடித்து பணம் பறிக்க முயன்றவா் கைது

மதுரை: மதுரையில் தனியாா் குடிநீா் நிறுவனத்தில், வணிக வரித் துறை அதிகாரி போல நடித்து, பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை வண்டியூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் யூசுப் (45). இவா் மஸ்தான்பட்டியில் உள்ள தனியாா் குடிநீா் விற்பனை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது நிறுவனத்துக்கு கடந்த மாதம் வந்த நபா் ஒருவா் வணிக வரித் துறை அதிகாரி என்று கூறி ரூ. 5 ஆயிரம் வாங்கிச் சென்றாா். இந்த நிலையில், அதே நபா் திங்கள்கிழமை மாலை மீண்டும் நிறுவனத்துக்கு வந்து பணம் கேட்டாா். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த யூசுப், அந்த நபரின் அடையாள அட்டையை வாங்கிப் பாா்த்தபோது, அது போலி அட்டை என்பதும், அவா் வணிக வரித் துறையில் பணிபுரியவில்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, யூசப் அளித்த தகவலின் பேரில், அண்ணாநகா் போலீஸாா் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில் அந்த நபா், மதுரை ஆனையூா் அய்யனாா்புரத்தைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (34) என்பதும் வணிகவரித் துறை அதிகாரி போல நடித்து பல இடங்களில் பணம் வசூலித்து வந்ததும் தெரிய வந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com