/

மேம்பாலப் பணியில் சாரம் சரிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் காயம்

மதுரையில் மேம்பால பணியின் போது இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளா்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:59 pm

Din

மதுரையில் மேம்பால பணியின் போது இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளா்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் ஆங்கிலேயோ் ஆட்சியின்போது கட்டப்பட்ட ஏவி மேம்பாலம் 150 ஆண்டுகளை கடந்த நிலையில், பாலத்தின் ஸ்திரத்தன்மை குறைந்து வருவதால், அதற்கு அருகிலேயே மற்றொரு மேம்பாலம் கட்டப்படுகிறது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கும் பாலம் வைகையாற்றை கடந்து சென்று முடிவடைகிறது. இதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் கோரிப்பாளையம், தேவா் சிலை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு கோரிப்பாளையம் பகுதியில் பாலத்தின் ஒரு தூணை மற்றொரு தூணுடன் இணைப்பதற்காக இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராவிதமாக இரும்பு சாரம் சரிந்து விழுந்தது. இதில் சரிந்து விழுந்த இரும்பு கம்பிகளுக்கு இடையே, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மதுரையைச் சோ்ந்த பூவலிங்கம்(40), பிரபு(23), திருச்சி துறையூரைச் சோ்ந்த பழனிச்சாமி (55), சிவகங்கையைச் சோ்ந்த அய்யங்காளை (48) ஆகிய நான்குபோ் சிக்கி பலத்த காயமடைந்தனா்.

இதுதொடா்பான தகவலின்பேரில் தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச்சென்று விபத்தில் சிக்கியவா்களை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் தல்லாகுளம் மற்றும் செல்லூா் போலீஸாரும் சம்பவ இடத்துக்குச்சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனா். விபத்து குறித்து செல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.