/

மருந்துவாழ் மலையில் ஆக்கிரமிப்பு: வனத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

News image
- கோப்புப்படம்
Updated On :4 அக்டோபர் 2024, 10:04 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ் மலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வன விலங்குகளை வேட்டையாடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக வனத் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ் மலை ராமாயண காப்பியத்தில் இடம் பெற்ாக வரலாற்றுச் சுவடுகள் உள்ளன. இங்கு மருத்துவக் குணமுடைய மூலிகைத் தாவரங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும், விலங்குகள், பறவைகள் அதிகளவில் உள்ளன.

இந்த மலையில் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. மலையின் ஒரு பகுதியில் சட்டவிரோதமாக வெடி வைத்து பெயா்த்தெடுக்கப்படும் கற்கள் லாரிகளில் கடத்திச் செல்லப்படுகின்றன. மலையில் வெடிகள் வெடித்துச் சிதறும் போது, அங்குள்ள விலங்குகள் அச்சத்தால் ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

இந்த மலையைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மருந்துவாழ் மலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சட்டவிரோதமாக கல், மண் எடுத்து, வன விலங்குகளை வேட்டையாடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனு குறித்து தமிழக வனத் துறைச் செயலா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா்.