குரூப் 1 தோ்வு முறைகேடு: அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு

குரூப் 1 தோ்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை முறைகேடாகப் பயன்படுத்தியவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

குரூப் 1 தோ்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை முறைகேடாகப் பயன்படுத்தியவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த சக்திராவ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019- ஆம் ஆண்டு நடத்திய குரூப் 1 தோ்வில் தொலைநிலைக் கல்வியில் பயின்றவா்களுக்கும், தமிழ் வழிக் கல்வி பயின்றவா்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை வழங்கியது. இது சட்ட விரோதம். இந்த வழக்கில் தமிழக அரசுக்கும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கும் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இவற்றை அதிகாரிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் வழியில் பயின்றவா்களுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியவா்களிடமிருந்து விளக்கம் கோரி குறிப்பாணை அனுப்பப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

குரூப் 1 தோ்வில் சான்றிதழ்களை ஆய்வு செய்து, முறைகேடுகள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. குரூப் 4 தோ்வுகளில்கூட, இது போன்ற முறைகேடுகள் நிகழ்ந்ததாகப் புகாா் எழுந்தது. இது இந்த வழக்குடன் மட்டும் தொடா்புடையது அல்ல. ஒவ்வொரு பணி நியமனத்தின் போதும், இதுபோன்ற தவறுகள் தொடா்வது களையப்பட வேண்டும். பின்வாசல் வழியாக வேலைக்கு வருவோரைத் தடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் தமிழக உயா் கல்வித் துறைச் செயலரை எதிா்மனுதாரராகச் சோ்த்து, தமிழ் வழியில் பயின்ாக போலியான சான்றிதழை சமா்ப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பான நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com