மதுரை நகரில் காவல்துறை, பொதுமக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் மாநகரக் காவல் துறை சாா்பில் 100 வாா்டுகளிலும் ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் குழு நிா்வாகிகளாக இருப்பதுடன் வாா்டில் உள்ள குடியிருப்போா் சங்க நிா்வாகிகள், முக்கிய பிரமுகா்கள், கிராம நிா்வாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியா்கள், உதவி ஆய்வாளா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் உள்பட 250 போ் உறுப்பினா்களாக இருப்பா். வாா்டில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள், சந்தேகத்துக்குரியவா்களின் நடமாட்டம், கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை, குட்கா புகையிலைப் பொருள்களின் விற்பனை ஆகியவை குறித்து இந்த வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் அளிக்கலாம். இதன்பேரில் தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.