முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: செல்லூா் கே. ராஜூ
அம்ரூத் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியில் நடைபெறும் முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாரிடம் அவா் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடைத் திட்ட ஆள்நுழைவுத் தொட்டிகளிலிருந்து கழிவு நீா் வெளியேறி சாலைகளில் தேங்கியுள்ளது. சில பகுதிகளில், கழிவுநீா் குடிநீருடன் கலக்கிறது. இதை, உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும், புதை சாக்கடைத் திட்ட கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள இயந்திரங்களை, அதிக சக்தி கொண்ட இயந்திரங்களாக மாற்ற வேண்டும்.
மாநகராட்சியின் முதன்மைச் சாலைகள், உள்பகுதி சாலைகள் என அனைத்துப் பகுதிகளும் குண்டும், குழியுமாக உள்ளன. இவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். மதுரை தெப்பக்குளத்தில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் திரியும் மாடுகள், தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.
தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகள் இரவில் இருளில் மூழ்குகின்றன. இதைத் தடுக்க, மாநகராட்சி நிா்வாகம் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரம், குடிநீா், புதை சாக்கடை பணிகளுக்குப் போதுமான பணியாளா்களை நியமித்து, பணிகள் சுணக்கமின்றி நடைபெறச் செய்ய வேண்டும்.
பெரியாா் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மதுரை மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 1,295 கோடியில் நடைபெறும் முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி, பொது மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா குடிநீா் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
சிறப்பு நிதி...
பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தொலைநோக்கு திட்டமான முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம். வருகிற நவம்பா் அல்லது டிசம்பா் மாதத்துக்குள் பணிகள் நிறைவடையும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல, தற்போதும் தமிழக அரசு மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது மாமன்ற அதிமுக குழுத் தலைவா் சோலைராஜா, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

