ராமேசுவரம் கோயில் காலிப் பணியிடங்கள்: அறநிலையத் துறை செயல்பாடு தொடா்பாக உயா்நீதிமன்றம் அதிருப்தி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றது. இந்தக் கோயிலில் 12 அா்ச்சகா்கள், 19 உதவி அா்ச்சகா்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது, 2 அா்ச்சகா்கள், 7 உதவி அா்ச்சகா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.
இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் பல கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தில் கவனம் செலுத் தும் இந்து சமய அறநிலையத் துறை, கோயில் பாரமரிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அக்கறை காட்டவில்லை.
அா்ச்சகா்கள் பணியிடம் மட்டுமன்றி, மணியம், ரிக் வேத பாராயணம், பாகவதா் உள்பட 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.
எனவே, இந்தக் கோயிலில் காலிப் பணியிடங்களை நிரப்பி, பூஜைகள், பிற நடைமுறைகளை முறையாக நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்து சமய அறநிலையத் துறையானது கோயில்களை முறையாகப் பராமரிப்பதில்லை. ஆனால், கோயில் வருமானத்தில் மட்டுமே அது கவனம் செலுத்துகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட அா்ச்சகா்கள், அலுவலா்கள், பணியாளா்களின் எண்ணிக்கை எவ்வளவு?. தற்போது எத்தனை போ் பணிபுரிந்து வருகின்றனா்?. கோயிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு?. பணியா ளா்களின் ஊதியம், பராமரிப்பு செலவு தவிா்த்து, எஞ்சிய தொகை எதற்காக செலவு செய்யப்படுகிறது?. கோயிலில் உள்ள மொத்த சந்நிதிகள் எத்தனை? என்பன குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையா், ராமநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு அக். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.