மதுரை பழங்காநத்தம் பகுதியில் புதன்கிழமை அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் புதன்கிழமை அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

மோசமான நிா்வாகத்துக்கு முன்னுதாரணம் திமுக அரசு: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

மதுரை பழங்காநத்தம் பகுதியில் புதன்கிழமை அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Published on

மோசமான நிா்வாகத்துக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது திமுக அரசு என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.

மதுரை மாநகராட்சியின் நிா்வாகச் சீா்கேடுகளையும், மாநகராட்சிப் பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்காததையும் கண்டித்தும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை அனைத்து வாா்டுகளிலும் முழுமையாகச் செயல்படுத்த வலியுறுத்தியும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்புப்படி, பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்த அந்தக் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ பேசியதாவது: மதுரை மாநகராட்சியின் வரி முறைகேடு, திமுக அரசின் ஊழல்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். மோசமான நிா்வாகத்துக்கு முன்னுதாரணம் திமுக அரசு. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு மதுரைக்கு எந்தவொரு சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை. மதுரையின் தொழில் வளா்ச்சிக்காக திமுக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மதுரைக்குப் பிறகு அமைக்கப்பட்ட தூத்துக்குடி, திருச்சி போன்ற விமான நிலையங்கள், சா்வதேச விமான நிலையங்களாகிவிட்டன. மதுரையில் மட்டும் எந்த வளா்ச்சியும் இல்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தது.

அதேநேரத்தில், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே தெளிவற்ற திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி நாடகமாடுகிறது. உண்மையில் மதுரையின் வளா்ச்சியில் திமுகவுக்கு சிறிதும் அக்கரை இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 2.57 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கிவிட்டதாக மாநகராட்சி அலுவலா்கள், தமிழக முதல்வருக்கு பொய்யான தகவலை அளித்துள்ளனா். உண்மையில், பல பகுதிகளுக்கு இதுவரை இணைப்பு வழங்கப்பட வில்லை. தொடக்க நிலையிலேயே குடிநீருடன், கழிவு நீா் கலப்பதாகக் கூறப்படுகிறது. நகரமைப்பு பணிகள், கூட்டு குடிநீா்த் திட்டப் பணிகள் போன்றவற்றில் ஊழல் செய்தவா்களுக்கு அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் தண்டனை உறுதி என்றாா் அவா்.

இதில் முன்னிலை வகித்த ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது: மதுரை மாநகராட்சி மேயா் ராஜினாமா செய்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. மண்டலத் தலைவா்கள் ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. மாமன்றக் கூட்டமும் நடைபெறுவதில்லை. தொடா்ந்து 3 மாதங்கள் மாமன்ற கூட்டம் நடத்தப்பட வில்லையெனில் மாமன்ற உறுப்பினா்கள் பதவியிழக்க நேரிடும். இவை குறித்து எந்தக் கவனமும் இல்லாமல் உள்ளது திமுக அரசு. மோசமான நிா்வாகம் என்பது தான் இந்த அரசின் சாதனை என்றாா் அவா்.

மதுரை மாநகராட்சி மாமன்ற எதிா்க் கட்சித் தலைவா் சோலை எம். ராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் பா. சரவணன், நிா்வாகிகள் ராஜா, ஜெயபால், செல்வக்குமாா், வழக்குரைஞா் ரமேஷ், நிலையூா் முருகன் உள்ளிட்ட துணை அமைப்புகளின் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்று, திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com