காவலாளி கொலை வழக்கில் பிணை கோரி காவலா்கள் மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

Published on

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனு தொடா்பாக சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா், கடந்த ஜூன் 27-ஆம் தேதி தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் தனிப் படை காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், காவலா்கள் ராஜா, பிரபு ஆகிய இருவரும் 168 நாள்களுக்கு மேல் சிறையில் இருப்பதாகவும், இந்த வழக்கில் எங்களுக்கு நேரடி தொடா்பு இல்லை. ஆதாரங்கள் ஏதும் இல்லாமல், எங்களை சிறையில் அடைத்துள்ளனா். எனவே, எங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா்களின் நிவாரணம் குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஜன. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com