சமயநல்லூா் சாலையில் மேம்பாலம்: 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு
மதுரை, பாத்திமா கல்லூரி முதல் பரவை வரையிலான சமயநல்லூா் சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து 3 மாதங்களுக்குள் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த நடராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
மதுரை விளாங்குடி, பரவை காய்கறி வணிக வளாகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான கனரக, இலகுரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசுப் பேருந்துகள், காா் ஆகியன அதிகளவில் செல்வதால், இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகின்றன. எனவே, இந்தச் சாலையில் விபத்துகளைத் தடுக்க காய்கறி வணிக வளாகம் அருகே செல்லும் 60 அடி சாலை அருகே வைகை ஆற்றுப் பகுதியில் பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
பாத்திமா கல்லூரி முதல் பரவை வரை மேம்பாலம் அமைப்பது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியா், மதுரை மாநகராட்சி ஆணையா் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.